கடந்தாண்டு டிசெம்பரில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழான முதலாவது பாரிய நடவடிக்கையாக, முக்கியமான மூலோபாயமிக்க துறைமுகமான ஹொடெய்டாவிலிருந்து யேமனின் ஹூதிப் போராளிகள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
முக்கியமான மனிதாபிமான உதவி சென்றடைவதற்காக, ஹொடெய்டா துறைமுகத்திலிருந்து வெளியேற ஹூதிகளும், யேமனிய அரசாங்கப் படைகளும் இணங்கியிருந்தன.
இந்நிலையில், ட்ரக்குகளில் ஹூதிப் படைகள் வெளியேறும் காணொளி வெளியாகியுள்ளபோதும், முழுதாக ஹொடெய்டாவிலிருந்து ஹூதிப் படைகள் வெளியேற நான்கு நாட்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும், நாடகத்தை நடத்துவதாக, ஹூதிப் போராளிகளை யேமனிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஹொடெய்டாவிலிருந்து ஹூதிப் போராளிகளின் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஃபர்ஹாம் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸின் யேமனுக்கான சிறப்புத் தூதரான மார்டின் கிறிஃபித்ஸ், முதற்படி என வர்ணித்துள்ளார்.
இந்நிலையில், கரையோரக் காவற்படை, பொலிஸ் சீருடைகளையணிந்த ஏனைய ஹூதி போராளி அங்கத்தவர்களின் மூலம் தம்மை ஹூதிப் போராளிகள் பிரதியீடு செய்வதாக யேமனிய அரசாங்கத்துக்கு ஆதரவான சிரேஷ்ட அதிகாரி அல்-ஹஸன் தஹர் தெரிவித்துள்ளார்.
யேமனின் நான்காண்டு கால சிவில் யுத்தத்தில் குறைந்தது 6,800 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், 10,700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகளின் தரவுகள் தெரிவிப்பதுடன், சத்துக்குறைபாடு, மோசமான சுகாதாரம் காரணமான நோய் போன்ற தவிர்க்கக்கூடிய காரணங்களால் ஆயிரக்கணக்கானோர் இறந்திருந்தனர்.
-tamilmirror.lk