புதைத்தபடி 35 சடலங்கள் கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவின் இரண்டாவது நகரமான குவாடலஜராவின் நகர்ப் பகுதியைச் சூழ 35 சடலங்களை மெக்ஸிக்க விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டு அரச வழக்குத் தொடருநர்கள், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், குழுக்களுக்கிடையிலான மோதலில் ஏறத்தாழ 29,000 கொலைகள் கடந்தாண்டு இடம்பெற்ற நிலையில், கடந்தாண்டு டிசெம்பரில் மெக்ஸிக்கோ ஜனாதிபதியாகப் பதவியேற்ற அன்ட்ரேஸ் மனுவல் லொபேஸ் ஒப்ரேட்டர் ஆற்ற வேண்டிய பணிக்கான இன்னொரு ஞாபகப்படுத்தலாக குறித்த சடலங்களின் கண்டுபிடிப்பு காணப்படுகின்றது.

குவாடலஜராவின் ஸபோபான் பகுதியிலுள்ள சொத்தொன்றில் புதைத்தபடி 27 சடலங்கள், விசாரணைகளின்போது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக குவாடலஜராவின் ஜலிஸ்கோ மாநில சட்டமா அதிபர் ஜெரார்டோ ஒக்டாவியோ சொலிஸ் தெரிவித்ததுடன், இப்பணி தொடர்ந்து கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

ஜலிஸ்கோ மாநில ஆளுநர் என்றிக்கே அல்ஃபாரோ, ஏனையவர்களுடனான செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த ஜெரார்டோ ஒக்டாவியோ சொலிஸ், மூன்று மீற்றர்களுக்கும் மேல் தாங்கள் தோண்டியதாகக் கூறியுள்ளார்.

குவாடலஜராவின் விசாரணை இடம்பெறும் இன்னொரு புதைகுழியிலிருந்து பிறிதொரு மனித மண்டையோடுகள் ஏழு கண்டுபிடிக்கப்பட்டதுடன், குவாடலஜராவுக்கு தென்மேற்காகவுள்ள தலஜொமுல்கோ மாநாகரப் பகுதியிலிருந்து பிறிதொரு சடலமொன்று மீட்கப்பட்டதாக ஜெரார்டோ ஒக்டாவியோ சொலிஸ் மேலும் தெரிவித்துள்ளார்

இந்நிலையில், புதைகுழிகள் கண்டுபிக்கப்பட்டமை, உள்ளூரில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்துக்கான அடியொன்று என வர்ணித்துள்ள ஜெரார்டோ ஒக்டாவியோ சொலிஸ், சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், சடலங்கள் எவ்வளவு காலமாக புதைக்கப்பட்டிருந்தன என்பது தெளிவில்லாமலுள்ளது. மெக்ஸிக்கோவின் மிகவும் பலம்வாய்ந்த போதைப் பொருள் குழுக்களிலொன்றான ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்ட்டலின் இருப்பிடமாக குவாடலஜராவே காணப்படுகின்றது.

-tamilmirror.lk