அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்

வாஷிங்டன்:அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில், அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார். ‘வெளிநாட்டினருக்கு, தகுதி மற்றும் திறமை அடிப்படையில், இனி, அதிக அளவில், நிரந்தர குடியுரிமை, ‘விசா’ வழங்கப்படும்,” என, அவர் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் பலர், நிரந்தர குடியுரிமைக்கான விசா பெறுவதற்காக, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் பேருக்கு மட்டுமே, ‘க்ரீன் கார்டு’ என்ற, நிரந்தர குடியுரிமைக்கான, ‘விசா’ வழங்கப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலும், அங்கு ஏற்கனவே நிரந்தர குடியுரிமை பெற்று வசிப்போரின் குடும்பத்தினருக்கே, வழங்கப்படுகின்றன. தகுதியின் அடிப்படையில், 12 சதவீத விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.இந்நிலையில், இதில் அதிரடி மாற்றங்கள் செய்து, புதிய குடியேற்ற கொள்கையை, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:தற்போது பின்பற்றப்படும் குடியேற்ற கொள்கை, வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையான பணியாளர்களை, நம் நாட்டுக்கு வரவழைப்பதில் தோல்வி அடைந்து விட்டது; இது, திறமைசாலிகளுக்கு பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. எனவே, இதில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

எனவே, வெளிநாட்டினருக்கு, தகுதி, திறமை, வயது, வேலைவாய்ப்பு, ஆங்கில புலமை, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், நிரந்தர குடியுரிமைக்கு அனுமதி வழங்கப்படும்.திறமையான மாணவர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது, திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில், 12 சதவீதம் பேருக்கு மட்டுமே, நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது; இது, 57 சதவீதமாக அதிகரிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

‘புதிய குடியேற்ற கொள்கை அமலுக்கு வந்தால், 10 ஆண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவில் பணியாற்றி வரும், நுாற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு, நிரந்தர குடியுரிமை நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்’ என, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய குடியேற்ற கொள்கைக்கு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

-dinamalar.com