ஆஸ்திரேலியாவின் அடுத்த அரசாங்கத்தை மீண்டும் தங்களது கூட்டணியே அமைக்கும் என்று அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) ஆஸ்திரேலியா முழுவதும், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவில் தற்போது லிபரல் கட்சி – தேசிய கட்சியின் கூட்டணி ஆட்சி செய்து வரும் நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.
ஆனால், அதை பொய்யாக்கும் வகையில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளும் கட்சி அதிகளவிலான இடங்களில் வெற்றிபெற்று வருகிறது. அதாவது, இன்னும் மூன்று இடங்களில் வெற்றிபெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் அடுத்த அரசையும் பழமைவாத கட்சியே அமைக்கும்.
இந்நிலையில் நேற்று இரவு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்காட் மோரிசன், “எனக்கு எப்போதுமே அற்புதங்கள் மீது நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
- ஆஸ்திரேலிய தேர்தலில் எதிரொலிக்கும் அதானியின் நிலக்கரி சுரங்கத் திட்டம்
- சர்ச்சைக்குரிய அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு ஆஸ்திரேலியா அரசு பச்சைக்கொடி
கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிப்பெறுமென்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.
ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக தோல்வியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷார்ட்டென் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். “தொழிற்கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது” என்று தனது கட்சியின் உறுப்பினர்களிடம் பில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தொழிலாளர் கட்சிக்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் இவர் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.
இறுதி முடிவுகள் வெளிவர இன்னும் சில மணிநேரங்கள் ஆகும் என்றாலும், இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் 75 சதவீதத்தை ஆளும் கட்சி பெற்றுள்ளது. அதாவது, ஆஸ்திரேலியாவில் ஆட்சியமைப்பதற்கு 76 இடங்களில் வெற்றிபெற வேண்டுமென்ற நிலையில், ஆளும் கூட்டணி கட்சி 73 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 65 இடங்களுடன் தொழிலாளர் கட்சி பின்தங்கியுள்ளது.
ஒருவேளை, ஆளும் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அது சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பது கட்டாயமாகும். தேர்தலில் வாக்களிக்காதவர்கள் அதற்கான தகுந்த காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால் 20 ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக செலுத்த நேரிடும். -BBC_Tamil