அலபாமா கருக்கலைப்பு தடை சட்டம்: பெண்கள் விவகாரத்தில் ஆண்கள் தலையிடுவது ஏன்?

அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வாக்களித்தது ஆண் அரசியல்வாதிகள். பெண்கள் விவகாரமான இதில் ஆண்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கலாமா?

சமீபத்தில் அலபாமாவும் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளது. இந்த விஷயம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அலபாமா மக்கள்தொகையில் 51 சதவீதத்தினர் பெண்கள். ஆனால் சட்டம் இயற்றும் நிலையில் இருக்கும் 85 சதவீதத்தினர் ஆண்கள். 35 இடங்கள் கொண்ட அலபாமாவின் செனட் சபையில் நான்கு பேர் மட்டுமே பெண்கள். அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியான ஐனநாயக கட்சியினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, செனட் சபைக்கு வெளியே திரண்டிருந்த பெண்கள், போராட்டம் நடத்தினார்கள். கருக்கலைப்பு குறித்து பெண்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்பது போன்ற பதாகைகளை அவர்களை வைத்திருந்தனர்.

அங்கிருந்த டெலனே கர்லிங்கேம் கூறுகையில், “மனித உரிமைகளை காப்பது குறித்து இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. இவர்கள் தேவையெல்லாம் பெண்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதே” என்றார்.

அலபாமாபடத்தின் காப்புரிமைHTTP://WWW.ALSENATEREPUBLICANS.COM/

இந்த விவகாரத்தில் ஆண்களின் தலையீடு தேவையா?

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கருக்கலைப்புத் தடை சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆம். இந்த சட்டம் ஆண்கள் உள்பட அனைவரையும் பாதிக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். இல்லை. பெண்கள்தானே கர்ப்பம் அடைகிறார்கள். இதுகுறித்து ஆண்கள் ஏன் முடிவு செய்ய வேண்டும் என சிலர் வாதிடுகிறார்கள்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சில ஆண்களில் ட்ராவிஸ் ஜாக்சனும் ஒருவர். அவருடைய சட்டையில் இவ்வாறு எழுதியிருந்தது. “உண்மையான ஆண்கள் பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவளிப்பார்கள்” என்று கூறுகிறார் அவர்.

ட்ராவிஸ் ஜாக்சன்
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாக்சன், “பெண்களின் உடல்களை பொறுத்த வரையில் அவர்கள் மட்டுமே வல்லுநர்கள். கருக்கலைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டியது அவர்கள்தான். அது அவர்களின் உடல், அவர்களின் விருப்பம். பெண்கள் அவர்களது உடலில் இதனை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை சொல்ல எந்த ஆணுக்கும் உரிமை கிடையாது” என்கிறார்.

Men4Choice என்ற அமைப்பின் நிறுவனர் ஒரென் ஜேகப்சன் இது குறித்து பேசுகையில், “இந்த சட்டம் ஆண்கள் உள்பட அனைவரையும் பாதிக்கும் என்று நம்புகிறேன். ஆனால், பெண்களின் உரிமைகள் மற்றும் முடிவுகளுக்காக ஆண்களும் போராட வேண்டும்” என்று கூறுகிறார்.

இது கருக்கலைப்பு குறித்த விவகாரம் மட்டுமல்ல. இது பெண்களின் சுதந்திரம் மற்றும் கட்டுப்பாட்டை சார்ந்தது என்று அவர் தெரிவிக்கிறார்.

“தங்களது சொந்த உடல், சுகாதாரம் மற்றும் குழந்தை தேவையா என்பது குறித்து முடிவெடுக்க முடியவில்லை என்றால் ஒருவரால் சுதந்திரமாக இருக்க முடியாது. அனைத்து மக்களின் சுதந்திரம் மற்றும் மரியாதைக்காக ஆண்கள் போராட வேண்டும்,” என்கிறார் ஜேகப்சன்.

ஆனால், கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் மொத்த சுமையையும் பெண்கள் மீதே வைத்தால், ஆண்களின் பொறுப்புகள் சுருங்கிவிடும் என்று கருக்கலைப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இது பெண்கள் விவகாரம் மட்டுமல்ல, அதைவிட பெரியது. மனித உரிமைகள் சம்மந்தப்பட்டது. நான் ஓர் ஆண், நான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறுவது அவமானம் என்கிறார் அமெரிக்காவின் பழமையான கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பான நேஷனல் ரைட் டு லைஃப் கமிட்டியின் தகவல் தொடர்பு இயக்குநரான டெர்ரிக் ஜோனஸ்.

பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

பெண்கள்

செனட் சபைக்கு முன் நடந்த போராட்டத்துக்கு முதலில் வந்து நின்றவர் கரோல் கிளார்க்.

“தங்களது உடலில் என்ன செய்ய வேண்டும் என்பதை பெண்களே முடிவு செய்யட்டும். அது அவனது உடல் அல்ல. அவளது உடல்” என்று உணரச்சிகர குரலில் கூறுகிறார் கரோல்.

அலபாமாவில் நான் பேசிய பெரும்பான்மையான பெண்கள் இதையே கூறுகிறார்கள். பெண்கள்தான் குழந்தையை சுமக்கிறார்கள், அதன் சமூக மற்றும் மருத்துவ விளைவுகளை அவர்கள்தான் சந்திக்கிறார்கள், ஆகவே பெண்கள்தான் கருக்கலைப்பு சட்டங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆனால், அலபாமாவிலும், வேறு சில அமெரிக்க மாகாணங்களிலும் இதற்கு எதிர் கருத்தையும் சில பெண்கள் சொல்கிறார்கள்.

குடியரசுக் கட்சியை சேர்ந்த இரு பெண்கள் என்னிடம் பேசுகையில், “பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளில் கூட கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறுகின்றனர்.

இலங்கை
இலங்கை

பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்து என்ன?

இந்த விவகாரத்தை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் ஒரே கருத்தைதான் முன்வைக்கின்றனர்.

2018ஆம் ஆண்டு ப்யூ ஆய்வு மையத்தின் ஆய்வுப்படி, கருக்கலைப்பு சட்டப்பூர்வாக்கப்பட வேண்டும் என்று 60 சதவீதப் பெண்கள் கூறியுள்ளனர். இதனை 57 சதவீத ஆண்கள் ஆதரித்துள்ளனர்.

கறுப்பின மற்றும் வெள்ளை இன அமெரிக்கர்கள் 60 சதவீதம் பேர், கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

உண்மையிலேயே இந்த சட்டங்களை ஆண்கள்தான் இயற்றுகிறார்களா?

அலபாமாவில் கருக்கலைப்புத் தடை சட்டத்திற்கு கையெழுத்திட்ட ஆளுநர் கேய் இவேஅலபாமாவில் கருக்கலைப்புத் தடை சட்டத்திற்கு கையெழுத்திட்ட ஆளுநர் கேய் இவே

பழமைவாத கருக்கலைப்பு சட்டங்கள் இருக்கும் பல்வேறு அமெரிக்க மாகாணங்களின் சட்டமன்றங்களில் பெரும்பாலும் ஆண்களே இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால், அலபாமாவில் கருக்கலைப்புத் தடை சட்டத்திற்கு கையெழுத்திட்ட ஆளுநர் ஒரு பெண்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்கால தேர்தல்களில் அதிகளவில் பெண்கள் வெற்றி பெற்று அரசு அலுவலகங்களில் பெண்கள்தான் அதிகளவில் இருக்கிறார்கள். இந்த புதிய பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியினரே ஆவர். -BBC_Tamil