“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” – ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே

ஹுவாவேயின் நிறுவனர் ரென் சங்ஃபே, அமெரிக்கா தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சீன அரசு ஊடகத்திடம் பேசிய அவர், சமீபத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா.

அந்த நிறுவனத்தை தடை செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.

“அமெரிக்க அரசியல்வாதிகளின் சமீபத்திய நடவடிக்கைகள், அவர்கள் எங்களது வலிமையை குறைத்து மதிப்பிடுவதை காட்டுகிறது” என ரென் சீன அரசு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை 5ஜி தொழில்நுட்பத்தில் ஹூவாவேயின் தயாரிப்புகளை பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து குறித்து மேற்கத்திய நாடுகளில் இருந்து பின்னடைவுகளை சந்தித்தது ஹுவாவே நிறுவனம்.

அமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.

இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும்.

ஹுவாவேவின் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட செயலிகளுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது" - ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே

திறந்த மூலத்தில் (Open Source) இருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.

திங்களன்று, அமெரிக்க வரத்தக துறை தற்காலிக அனுமதி வழங்கியதன் மூலம் சில நிறுவனங்கள் ஹூவாவே நெட்வோர்க் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

அமெரிக்காவின் தடை தங்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஏற்கனவே தங்களது சொந்த தயாரிப்புகளை மேம்படுத்திவிட்டதாகவும் ரென் தெரிவித்தார்.

அமெரிக்க சீனா அதிகார போட்டியில் ஹூவாவே மையப்புள்ளியாக பார்க்கப்பட்டது.

-BBC_Tamil