இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததையடுத்து, ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முன்னதாக, தேர்தலில் மோசடி நடவடிக்கைகள் அதிகம் இடம்பெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது.

இருப்பினும், பிரபாவோவும் அவருடைய ஆதரவாளர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உடனடி அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர். எனினும், பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

-athirvu.in