இந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில் 6 பேர் பலி

இந்தோனீசியாவில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட பிரம்மாண்ட போராட்டங்களின்போது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஜகார்த்தா ஆளுநர் அனீஸ் பாஸ்விடான் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் தீ எரிந்து கொண்டிருப்பதையும், போராட்டக்காரர்கள் கற்களை போலீஸார் மீது வீசுவதையும் காட்டும் காணொளிகள் அங்கிருந்து வருகின்றன.

தலைநகரில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த மோதலை கட்டுப்படுத்த, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தினர்.

இதனிடையே தோல்வி அடைந்த அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியன்டோ, இந்த தேர்தலில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

எரிந்த கார்கள்

மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இறந்தோரின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ள இந்தோனீஷிய காவல்துறையினர், இந்த இறப்புகளுக்கான காரணம் புலனாய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் ஆயுத சக்தியை நேரடியாக பயன்படுத்தினர் என்கிற குற்றச்சாட்டை தேசிய காவல்துறை தலைவர் மறுத்துள்ளார்.

தேர்தல் மேற்பார்வை நிறுவனத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பட்டாசுகளும், கற்களும் போலீசார் மீது வீசப்பட்டன. நகரின் பிற இடங்களிலும் மோதல்கள் நடைபெற்றன.

வதந்திகள் பரவுவதை தடுக்க சில பகுதிகளில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை

இந்த போராட்டங்கள் தன்னிச்சையாக நடைபெற்றதல்ல. திட்டமிட்டே நடத்தப்பட்டவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களில் பெரும்பாலோர் ஜகார்த்தாவுக்கு வெளியில் இருந்து வந்தனர் என்று காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவரான முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.

கலவரக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் விடோடோ வாக்குறுதி அளித்துள்ளார்.

“இந்த நாட்டை கட்டி எழுப்பவும், வளர்க்கவும் தயாராக இருக்கும் அனைவருடனும் திறந்த மனதுடனே வேலை செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், பொது பாதுகாப்பு, ஜனநாயக நடைமுறை அல்லது நாட்டின் ஒற்றுமையை குலைக்க முயலுகிற யாரையும் பொறுத்துக்கொள்ளமாட்டேன்” என்று செய்தியாளர் சந்திப்பில் அதிபர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை தலைநகர் ஜகார்த்தாவில் அமைதியாக தொடங்கிய இந்த போராட்டம், விரைவில் வன்முறையாக மாறி கார்களை தீ வைத்தும், காவல்துறையினர் மீது பட்டாசுகளை எறிந்தும் தீவிரமாகியது.

கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்த வேண்டியதாயிற்று.

-BBC_Tamil