யோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் – இரானில் 30 பேர் கைது

இரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்ததால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது.

இரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இந்த கைது நடந்துள்ளது.

கைதானவர்களில் யோகா பயிற்றுநரும் அடக்கம் என்று மசூத் சுலைமானி எனும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை என்றும், இன்ஸ்ட்டாகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய அமைப்புள்ள நாடான இரான் சட்டங்களின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

தொழில்முறையாக யோகா பயிற்றுவிப்பதும் இரானில் தடை செய்யப்பட்டுள்ளது.

யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் முறையற்று நடந்துகொண்டதாகவும், முறையற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் மசூத் சுலைமானி கூறியுள்ளதாக தஸ்நிம் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அவர்கள் எப்படியான ஆடை அணிந்திருந்தனர் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

கைது செய்வதற்கு சிலகாலத்திற்கு முன்பு வரை அந்த வகுப்புகள் நடந்த தனியார் வளாகத்தை பாதுகாப்பு படையினர் கண்காணித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலம்பிய ஏரோபிக் நடனமான ஜும்பா மற்றும் உடலை குலுக்கி செய்யும் எவ்விதமான பயிற்சி வகுப்புகளையும் எடுக்க கூடாது என இரான் விளையாட்டு அதிகாரிகள் 2017ஆம் ஆண்டு தடை விதித்தனர்.

இது இஸ்லாமிய நெறிகளுக்கு முரணாக இருப்பதாக இரான் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு இரான் விளையாட்டு அதிகாரிகள் அப்போது கடிதம் எழுதியிருந்தனர்.

-BBC_Tamil