ஈரானில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா விரும்பவில்லை – ஜப்பானில் டிரம்ப் பேட்டி!

ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். அங்கு ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டுக்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு பனிப்போர் மற்றும் வடகொரியா பிரச்சனை தொடர்பாக இன்று பிற்பகல் டிரம்ப் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

ஈரானை அச்சுறுத்தும் வகையில் விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் கூடுதலாக 1500 துருப்பு ராணுவ வீரர்களை அமெரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு கடல்பகுதிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ள டிரம்ப், ‘ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். அங்கு ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை’ என தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், ’அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அரசு விரும்பினால் நாங்களும் தயார். ஈரான் நாட்டு தலைமையிடம் ஷின்சோ அபே மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பது எனக்கு தெரியும்.

ஈரானுக்கு மோசமான நிலைமை ஏற்பட யாரும் விரும்பவில்லை. குறிப்பாக, நான் ஈரானை காயப்படுத்த விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

-athirvu.in