எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்பு அதிகரிக்க இதுதான் காரணமா?- குற்றச்சாட்டை மறுக்கும் நேபாளம்!

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற வீரர்களின் உயிரிழப்பு அதிகரிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நேபாள அரசு மறுத்துள்ளது.

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும், மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக நேபாள அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. உரிய அனுமதி பெற்று, ஷெர்பாக்களின் வழிகாட்டுதலின்படி மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சீசனில் இதுவரை 16 பேரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அளவிற்கு எவரெஸ்டில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம், நேபாள அரசு அளவுக்கு அதிகமாக பெர்மிட்டுகளை வழங்குவதுதான் என கூறப்படுகிறது. பெர்மிட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என மலையேற்ற வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அதிக பெர்மிட்டுகள் வழங்குவதும் மட்டும்தான் உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை நேபாள அரசு மறுத்துள்ளது.

இதுபற்றி நேபாள சுற்றுலாத்துறை இயக்குனர் டாண்டு ராஜ் கிம்ரே கூறுகையில், “இந்த ஆண்டு இதுவரை 381 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர். ஆனால், வானிலை மோசமாக இருந்ததால், சில பாதைகளில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் மலையேற்ற வீரர்கள் காத்து நின்றனர். அப்போது உடல்நலக் குறைவால் சிலர் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல் மோசமான வானிலை உள்ளிட்ட பிற காரணங்களாலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம். காணாமல் போனவர்கள் விரைவில் நலமுடன் திரும்பவும் பிரார்த்தனை செய்கிறோம். இமயமலையில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்வது சாகசமான மற்றும் சிக்கலான பயணம். இந்த பயணம் மேற்கொள்ள முழுமையான விழிப்புணர்வு தேவை. இதில் விபத்துகள் தவிர்க்க முடியாதவை” என்றார்.

-athirvu.in