பல சிறைகளில் வன்முறை: 55க்கும் மேற்பட்டோர் இறந்தனர்

வட பிரேஸிலுள்ள வெவ்வேறு சிறைச்சாலைகளில், 55க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் கடந்த இரண்டு நாட்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

அமெஸொனாஸ் மாநிலத் தலைநகர் மனாஸூக்கு அருகேயுள்ள அன்டோனியோ ட்ரின்டேட் குற்றவியல் நிறுவகத்திலேயே பெரும்பாலான இறந்தவர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இறந்தபடி கண்டெடுக்கப்பட்ட சிறைக்கைதிகள் அனைவரும் மூச்சுத் திணறலின் சமிக்ஞைகளை காண்பித்திருந்ததாக அமெஸொனால் மாநில சிறைச்சாலை முகவரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், அமெஸொனாஸ் மாநில சிறைச்சாலைகளில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு படைகளை அனுப்புவதாக பிரேஸில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னர் 42 பேர் இறந்திருந்ததாகக் கூறப்பட்டிருந்ததை, நேற்று முன்தினமிரவு அமெஸொனாஸ் மாநில சிறைத் திணைக்கள அறிக்கையானது 40ஆக குறைத்திருந்ததுடன், நான்கு சிறைச்சாலைகளில் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில் வேறெந்த தகவல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

மனாஸிலுள்ள அனிஸியோ ஜொபிம் சிறைசாலை வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் 15 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று முன்தின மோதல்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே சிறைச்சாலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற புரட்சி 20 மணித்தியாலங்கள் நீடித்த நிலையில் 56 பேர் இறந்திருந்தனர். உலகில் மூன்றாவது அதிகூடிய சிறைக்கைதிகளை பிரேஸில் கொண்டிருக்கையில், உத்தியோகபூர்வ தரவுகளின்படி 2016ஆம் ஆண்டு ஜூனில் 726,712 கைதிகள் இருந்திருந்தனர். அந்தவகையில், 2016ஆம் ஆண்டில் பிரேஸிலுள்ள சிறைச்சலைகளின் கொள்ளளவு 368,049ஆகவே மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிகரித்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக குழு வன்முறைகளால் பிரேஸில் சிறைச்சாலைகள் பாதிக்கப்பட்ட நிலையில், கலவரங்கள், சிறையுடைப்பு முயற்சிகள் சாதரணமானதாகவே காணப்படுகின்றது.

-tamilmirror.lk