பாகிஸ்தானில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததால் இருவருக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஜெனரல் ஒருவருக்கு வெளிநாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகளின் பேரில், ராணுவ நீதிமன்றம் ஒன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் அரசு அதிகாரி ஒருவருக்கு இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகவும், ரகசியமாக வைக்கப்பட வேண்டிய தகவல்களை கொடுத்ததாகவும் அவர்கள் மூவர் மீதும் வழக்கு நடந்து வந்தது.

அவர்கள் யாருக்காக உளவு பார்த்தார்கள், எந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள் போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எனினும், அவர்கள் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுக்கு உளவு பார்த்ததாக பெரும்பாலானோர் கூறுவதாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் இலியாஸ் கான் தெரிவிக்கிறார்.

அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாகவே ராணுவ ஒத்துழைப்பு இருப்பதாகவும், இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் அடிக்கடி நிகழும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் யார்?

ஓய்வு பெற்ற லெஃப்டினண்ட் ஜெனரல் ஜாவேத் இக்பால் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு மூத்த ராணுவ அதிகாரிக்கு இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்படுபவது பாகிஸ்தானில் மிகவும் அரிதானது என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் ராணுவத்தின் கள நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தும் பொறுப்பை தனது பணிக்காலத்தின்போது அவர் செய்து வந்தார்.

ராணுவத்தினரின் ஒழுங்கையும், பொறுப்புகளையும் கண்காணிக்கும் பணியிலும் அவர் இருந்துள்ளார்.

ஓய்வுபெற்ற பிரிகேடியர் ராஜா ரிஸ்வானுக்கும், வாசிம் அக்ரம் எனும் மருத்துவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிம் அக்ரம் எந்த அரசு அமைப்புக்காகப் பணியாற்றினார் என்று தெரிவிக்கப்படவில்லை.

தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற அமைப்பு முறையில் வழிவகை உள்ளது.

-BBC_Tamil