‘ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேற வேண்டும்’

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானிய அரசாங்கத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பேரம்பேசல்களில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான நைஜல் ஃபராஜ் பங்கெடுக்க வேண்டும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் வெளியேற பிரித்தானியா தயாராக வேண்டும் எனவும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

த சண்டே டைம்ஸ் இணையத்தளமுடனான நேர் காணலிலேயே மேற்குறித்த கருத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் பேரம்பேசல்களை விமர்சித்து, ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான பொரிஸ் ஜோன்சன், சிறந்த பழமைவாதக் கட்சித் தலைவராக இருப்பார் என்றும் நேற்று முன்தினம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் பேரம்பேசல்களில் பிரெக்சிற் கட்சியின் தலைவரும், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் விமர்சகருமான நைஜல் ஃபராஜ் உள்ளடக்கப்பட்டால் பல விடயங்களை வழங்குவார் என இராஜதந்திர மரபை மீறி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேரம்பேசல்களில் தாம் வேண்டியதை பிரித்தானியா பெறாவிட்டால், பேரம்பேசல்களிலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என மேலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகையில் 39 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை செலுத்த வேண்டியுள்ள நிலையில், தான் அதைச் செலுத்த மாட்டேன் என்றும் அதுவொரு பாரிய தொகையென்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

-tamilmirror.lk