தியானன்மென் சதுக்கம்: சீனாவில் என்ன நடந்தது? ரத்தம் தோய்ந்த நிகழ்வை நேரில் பார்த்தவரின் சாட்சியம்

பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் போராட்டங்களை நசுக்க சீனா தனது ராணுவ வல்லமையை பயன்படுத்தி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன.

என்ன நடந்தது தியானன்மென் சதுக்கத்தில்?

ஜனநாயக சீர்திருத்தம் வேண்டும் என்று கோரி தியானன்மென் சதுக்கத்தில் 1989ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தியானன்மென்னில் நடைபெற்ற போராட்டம் சீன அரசால் ஒடுக்கப்பட்டது.

சீன ராணுவமும் யுத்த டாங்கிகளும் தியானன்மென் சதுக்கத்தில் நுழைந்து மாணவர் போராட்டத்தை அகற்ற முற்பட்டனர். துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன.

தியானன்மென் சதுக்கம் அன்றும், இன்றும்தியானன்மென் சதுக்கம் அன்றும், இன்றும்

போராட்டத்திற்கு பிறகு, 1989ஆம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் சீனா வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 4ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பொதுமக்களில் 200 பேர் இறந்ததாகவும், பல பாதுகாப்பு அதிகாரிகள் இறந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வெளியான எண்ணிக்கை

இப்படியான சூழலில், சீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்கப் போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, 2017ம் ஆண்டு வெளியாகிய பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவித்தன.

இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆலன் டொனால்டிற்கு ரகசிய வெளியுறவு தகவல் பறிமாற்ற முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அளித்தவர், அப்போதைய சீன அரசின் குழுவில் இருந்தவர் என்கிறார் டொனால்டு.

Protesters in Tiananmen Square, 1989தியானன்மென் சதுக்க போராட்டக்கார்கள்

தணிக்கை

தியானன்மென் சதுக்க போராட்டம் நினைவு கூரப்படுவதை சீன அரசு விரும்புவதில்லை.

இந்த ஆண்டும் தியானன்மென் சதுக்கத்தில் யாரும் ஒன்று கூடாத வண்ணம் பாதுகாப்பினை வலுப்படுத்தியது, சமூக ஊடகத்திலும் யாரும் கருத்து தெரிவிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டது என்கிறார் பிபிசியின் பெய்ஜிங்க் செய்தியாளர் ஜான் சுட்வொர்த்.

தடையை மீறி சதுக்கத்தில் கூடுவோர் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்போருக்கு மட்டுமல்லாது, அது குறித்த செய்திகளையும் கடுமையாக தணிக்கைக்கு உள்ளாக்குகிறது சீன அரசாங்கம்.

தியானன்மென் சதுக்கப் போராட்டத்தை நினைவு கூர்ந்து பகிரப்பட்ட ட்வீட்டுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து இது தொடர்பாக விளக்கம் கொடுத்திருந்தது ட்விட்டர் நிறுவனம்.

அரசியல் குழப்பம்

இதற்கு மத்தியில் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கே தியானன்மென் சதுக்க நிகழ்வை ‘அரசியல் குழப்பம்’ என கூறியுள்ளார்.

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கே, வணிகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சீனாவில் நடந்த ஒரு கூட்டத்தில் ஜூன் 2 அன்று(ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றினார்.

அப்போது அவரிடம், தியானன்மென் நிகழ்வினை சீனா சரியாகக் கையாளவில்லை என மக்கள் இப்போதும் கூற என்ன காரணமென கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டம், அரசியல் குழப்பமாகும். அரசியல் குழப்பத்தை அடக்குவது என்ற சீன அரசின் கொள்கை மிகச் சரியானது,” என்றார்.

30 ஆண்டுகால நினைவுகள்

தியானன்மென் சதுக்கப் போராட்டத்தில் இறந்த வாங் நன்னின் பாட்டி ஜாங் ஜியாங்லிங்கினை, வாங்கின் கல்லறைக்கு அழைத்து செல்ல பிபிசி ஏற்பாடு செய்திருந்தது.

ஒரு பாட்டியின் நினைவுகளில் தியானன்மென் சதுக்கம்

வாங் நன் 19 வயதில் தியானன்மென் சதுக்கப் போராட்டத்தில் பலியானார். ஜாங் ஜியாங்க்லிங்கிற்கு தற்போது 81 வயதாகிறது.

வாங்கின் கல்லறைக்கு சென்ற போது, அதனை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர் என்கிறார் பிபிசியின் பெய்ஜிங்க் செய்தியாளர் ஜான் சுட்வொர்த்.

“சீருடை அணிந்த போலீஸார் எங்களை கேள்வி கேட்டனர், எனது கடவுச் சீட்டை, ஊடகவியலாளர் அடையாள அட்டையை பரிசோதனை செய்தனர்,” என்கிறார் அவர்.

ஜாங் ஜியாங்க்லிங்கினை பத்திரிகையாளர்கள் யாரும் நெருங்காத வண்ணம் போலீஸார் கவனமாக பார்த்து கொண்டதாக குறிப்பிடுகிறார்.

நேரில் பார்த்தவரின் சாட்சியம்

தியானன்மென் சதுக்கப் போராட்டம் தொடர்பாக பிபிசியிடம் ஏராளமான காணொளிகள் உள்ளன.

தியானன்மென் சதுக்கம்: ரத்தம் தோய்ந்த நிகழ்வை நேரில் பார்த்தவரின் சாட்சியம்

போரட்டம் நடந்தபோது எடுக்கப்பட்ட ஒவ்வொரு துண்டு காணொளியும், அந்தப் படங்களை எடுத்தவர்களின் தீரத்தை காட்டுகின்றது.

குண்ட டிபட்டவர்களை தங்களது மிதி வண்டியில் ஏற்றிக் கொண்டு போராட்டக்காரர்கள் செல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த சம்பவங்களை நேரில் பார்த்த பிரிட்டன் சுற்றுலா பயணி மார்க்கரெட், “அந்த ராணுவ வீரர் மகிழ்ச்சியாக, பாரபட்சமற்ற முறையில் கூட்டத்தை நோக்கி சுட்டார். மூன்று இளம் மாணவிகள் ராணுவத்தினரின் காலில் விழுந்து, சுடுவதை நிறுத்த சொல்லி கெஞ்சினர். ஆனால், அவர் அந்த மாணவிகளையும் கொன்று விட்டார்” என்கிறார்.

“அது போல ஒரு முதியவர் சாலையை கடக்க வேண்டி, கைகளை தூக்கியவாறு நடந்து சென்றார். அவரையும் அந்த ராணுவ வீரர் சுட்டு கொன்றார்,” என்று தாம் பார்த்ததை விவரிக்கிறார்.

மேலும், “அந்த ராணுவ வீரரின் துப்பாக்கியில் உள்ள குண்டு தீர்ந்தது. அதை அவர் நிரப்ப முயற்சிக்கும்போது, கூட்டம் அவரை நோக்கி வந்து, அவரை மரத்தில் தொங்கவிட்டது” என்கிறார்.

தியானன்மென் சதுக்கம் குறித்து நினைவு கூரப்படும் ஒவ்வொரு சொல்லிலும் ரத்தம் தோய்ந்திருக்கிறது.

-BBC_Tamil