சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14 ம் நாள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற்சங்கங்களும் பெண்கள் உரிமைகள் அமைப்பும் தெரிவிக்கின்றன.
‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறைவாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந்தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.ஐ.ஏ. வெளியிட்ட அறிக்கையில், கல்வித்தகுதியும், துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் அவரது வேலைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை, பெண்களின் வேலைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் போராட்டக்குழுவினர் வலியுறுத்த உள்ளனர்.
-athirvu.in