‘சினாயில் பாதுகாப்புப் படையினர் எண்மர் கொல்லப்பட்டனர்’

இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் நீண்ட காலமாக எகிப்தியப் படைகள் மோதலில் ஈடுபடுகின்ற வட சினாயில், சோதனைச் சாவடியொன்றைத் தாக்கிய ஆயுததாரிகள், பாதுகாப்புப் படையினர் எண்மரை நேற்று (05) கொன்றதாக எகிப்திய அரச செய்தி முகவரகமான மெனா தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐந்து ஆயுததாரிகளும் இறந்ததாகவும், சிலர் தப்பித்துள்ளதாகவும் எகிப்திய அரச தொலைக்காட்சியும், மெனாவும் மேலும் தெரிவித்துள்ளன.

முன்னதாக, வட சினாயில் குறிப்பிட்ட எண்ணிக்கையான பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் தாக்கப்பட்டதாக மெனா கூறியிருந்தது.

சினாய் வளைகுடாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு அல்லது தொடர்புபட்ட இஸ்லாமியக் குழுக்களுக்கெதிராக எகிப்திய இராணுவமும், பொலிஸாரும் பாரியதொரு பாதுகாப்பு நடவடிக்கையொன்றை கடந்தாண்டு பெப்ரவரியில் ஆரம்பித்திருந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் இறந்த பள்ளிவாசலொன்றின் மீதான 2017ஆம் ஆண்டு நவம்பர் மாத இஸ்லாமிய ஆயுததாரிகளின் தாக்குதலொன்றைத் தொடர்ந்தே குறித்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்தவகையில், தாம் தமது பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

-tamilmirror.lk