வனவிலங்கு மற்றும் தீவகற்ப மலேசியா தேசிய பூங்கா துறை(பெர்ஹிலிடான்) கோலாலும்பூர், டேசா பாண்டானில் ஒரு கொண்டோமினியத்தில் சூரியக் கரடிக் குட்டி ஒன்றை வைத்திருந்த பாடகி ஒருவரைக் கைது செய்தது.
பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து பெர்ஹிலிடான் அதிகாரிகள் அந்த 27-வயது பெண்ணை அவரது வீட்டில் கைது செய்தனர்.
விசாரணைக்காக அப்பெண் கைது செய்யப்பட்டதை பெர்ஹிலிடான் தலைமை இயக்குனர் அப்துல் காடிர் அபு ஹாஷிமும் உறுதிப்படுத்தினார்.
“கரடிக் குட்டி தனக்குச் சொந்தமானது என்பதைக் காட்டும் எந்தவோர் ஆவணமும் அப்பெண்ணிடம் இல்லை”, என்றாரவர்.
பெர்ஹிலிடான் அனுமதியின்றி, அருகிவரும் ஓர் உயிரினத்தை வைத்திருந்த குற்றத்துக்காக அவர்மீது விசாரணை நடப்பதாக அப்துல் காடிர் தெரிவித்தார். அப்படிப்பட்ட உயிரினத்தை வைத்திருப்பது 2010 வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும்.