செக்ஸ் வீடியோ பரப்பப்படுவதை நிறுத்துக_ பிகேஆர்

அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ ஒன்றைச் சமூக ஊடகங்களில் பரப்புவதைப் பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிகேஆர் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று ஓர் அறிக்கையில் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், “சாக்கடை அரசியல்” நாட்டுக்கு எந்த விதத்தில் நன்மையளிக்காது என்றும் பிகேஆர் அதற்கு எதிரி என்றும் கூறினார்.

சைபுடின், மூத்த அமைச்சர் ஒருவர் ஒரு ஆடவருடன் ஒரே படுக்கையில் இருப்பதைக் காண்பிக்கும் ஆபாச வீடியோ பற்றித்தான் அவ்வாறு குறிப்பிட்டார்.

அக் காணொளி வெளியான 24 மணி நேரத்தில் முதன்மைத் தொழில்கள் அமைச்சின் அதிகாரிகளில் ஒருவரான முகம்மட் ஹவீஸ் அப்துல் அசீஸ், அதில் உள்ள ஆடவர் தானே என்பதைக் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஹவீஸ், அச்சமபவம் சண்டாகான் இடைத் தேர்தலுக்கு முதல் நாள், மே10-இல், சண்டாகானில் உள்ள Four Points ஓட்டலில் நடந்ததாகக் கூறினார்.

ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சர் இதன் தொடர்பில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அந்த அமைச்சர் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கும் வந்திருந்தார்.