செளதி அரேபியா விமான நிலையத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்

தென் மேற்கு செளதி அரேபியாவில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையத்தில் யேமனை சேர்ந்த ஹூதி கிளர்ச்சிக் குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது பொதுமக்களில் குறைந்தது 26 பேர் காயமடைந்திருப்பதாக செளதி ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, புதன்கிழமை காலை அபா விமான நிலையத்திலுள்ள வருகை பகுதியிலிருக்கும் ஒரு ஹால் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் இரு குழந்தைகளும் அடங்குவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையம் மீது தாழ்வாக பறக்கக்கூடிய இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஒரு நவீன வழிகாட்டு ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கிளர்ச்சி குழு கூறியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக ஹூதி கிளர்ச்சி குழுவுடன் யேமன் அரசு நடத்திவரும் போரில் செளதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு யேமனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் யேமனில் வெடித்த மோதலில் பெரும் சேதம் ஏற்பட்டது அப்போது, கிளர்ச்சி குழுவினர் நாட்டின் மேற்கு பகுதியை ஒட்டிய பெரும்பாலான இடங்களை கைப்பற்றினர். இதன் காரணமாக, யேமன் அதிபர் அபெட்ராபு மன்சூர் ஹாதி நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு தப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட நிலையில், ராணுவ ரீதியாக இரானின் உள்ளூர் ஷியா அதிகார வர்கத்தினரால் ஹூதி கிளர்ச்சிக்கு குழுவுக்கு ஆதரவு வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.

செளதி அரேபியா

இதனையடுத்து, அதிபர் ஹாதியின் அரசை யேமனில் மீண்டும் நிலைநாட்டும் நோக்கில் செளதி அரேபியா மற்றும் பிற 8 முக்கிய சுன்னி அரபு நாடுகள் வான்வழி தாக்குதல்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமையன்று அதிகாலை சுமார் 02.21 மணிக்கு அபா விமான நிலையத்தை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை ஒன்றை தொடுத்ததாக செளதி கூட்டுப்படைகளின் ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் சர்வதேச மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்ட ராணுவ பேச்சாளர் கர்னல் டுர்கி அல்-மலிக்கி, இது ஒரு போர் குற்றமாகக்கூட கருதப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

அபா விமான நிலையம் யேமன் நாட்டுடனான எல்லையிருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலையில் அமைந்துள்ளது. -BBC_Tamil