ஹாங்காங் போராட்டம்: சர்சைக்குரிய மசோதா கைவிடப்படுவதாக அரசாங்கம் அறிவிப்பு

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஹாங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.

முன்னதாக, ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்தும்கூட மசோதாவை ரத்து செய்ய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

“எங்கள் நடவடிக்கையில் இருந்த குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள் சர்ச்சைகளை தூண்டிவிட்டதற்கு நான் ஆழ்ந்த துக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.”

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சீனாவின் செல்வாக்கு அதிகமாகிவிடும் என்று போராட்டக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இதுகுறித்து நிதானமாக யோசிக்கும் என்று லாம் மேலும் கூறினார்.

தலைவர் கேரி லாம்
தலைவர் கேரி லாம்

மேலும், மசோதா குறித்து மக்களுக்கு தெளிவாக விளக்கப்படவில்லை என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.

அமைதி நிலையை மீண்டும் கொண்டு வருவதே தற்போது ஹாங்காங்கின் முதன்மையான நோக்கம் என்றும் லாம் தெரிவித்தார்.

எதற்காக இந்த போராட்டம்?

கொலை செய்வது, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை சீனா, தைவான், மக்காவில் உள்ள அதிகாரிகள் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தால், ஹாங்காங் அவர்களை ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும் விதமாக ஹாங்காங் அரசின் நிர்வாக தலைவர் கேரி லாம் முன்மொழிந்துள்ள சட்டதிருத்தம் இது.

இந்த கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு விவகாரத்துக்கு தனித்தனியாக முடிவெடுக்கப்படும்.

ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடந்த போராட்டம்தான் மிகவும் பெரியது.

கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தைவான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட திருத்தம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் மூலமாக அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஹாங்காங் நீதித்துறையிடம்தான் முழு அதிகாரம் இருக்கும். அரசியல், மத ரீதியான குற்றம் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். -BBC_Tamil