சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததாக ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தனிச்சையான மற்றும் நடுநிலையான அடுத்த விசாரணை நடக்கும் என சிறப்பு விசாரணை அதிகாரி ஆக்னஸ் காலாமார்ர்ட்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
கஷோக்ஜி இஸ்தான்புல்லிலுள்ள சௌதி தூதரகத்தில் சௌதி முகவர்களால் கொல்லப்பட்டார்.
- “ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார்” சௌதி அரசு வழக்குரைஞர் ஒப்புதல்
- ஜமால் கஷோக்ஜி கொலையை யார் செய்தது? இன்னும் முடிவுக்கு வராத அமெரிக்கா
- ஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” – முதல் கட்ட அறிக்கை
தாங்கள் இளவரசர் முகமதின் ஆணைப்படி செயல்படவில்லை என சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதில் சௌதி தன் முதல் கட்டமாக அடையாளம் தெரியாத 11 பேரின் மேல் குற்றம்சாட்டி அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க கோரியது.
ஆனால் இந்த விசாரணை சர்வதேச நடவடிக்கைகளையும் அதன் தரத்தையும் சரியாக கடைபிடிக்காததால் நிறுத்தி வைக்கப்படுகிறது என காலாமார்ட் கூறியுள்ளார்.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
இந்த கொலைக்கு கூலிப்படையினர்தான் காரணம் என்று செளதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
செளதி அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் முக்கியமானவராக இருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது செளதி உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளால் பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் முன்பு தெரிவித்தார்.
முன்னதாக, பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி அரேபியா நடந்துகொண்ட விதம் மிக மோசமான மூடிமறைப்பாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.
“இந்த கொலையை திட்டமிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை நிச்சயம் கடுமையாக தண்டிக்க தான் உறுதியாக இருப்பதாக செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் முன்பு கூறியிருந்தார். -BBC_Tamil