இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய இரண்டு போராட்டங்களைக் ஓரு வாரத்திற்குள் ஹாங்காங் கண்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு மிகவும் வன்முறையான போராட்டம் ஆகும்.
இந்த போராட்டங்களை முன்னிறுத்தி செயல்படுத்தியது இளைஞர்கள். பெரும்பாலும் தங்கள் பதின்ம வயதை சமீபத்தில் தாண்டியவர்கள். அவர்கள் எவ்வாறு தீவிரமாக மாறினார்கள்?
“மக்களை ஓடுங்கள் என்று நாங்கள் எச்சரித்தோம்.”
“போராட்டங்களுக்குப்பின் என் பெற்றோர் என்னை துரத்திவிட்டனர்”
“கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு முதன் முறையாக உள்ளானேன். என் கண்களில் இருந்து கட்டுப்படுத்த முடியாதபடி கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.”
“என்னுடைய உண்மையான பெயரை கொடுப்பதற்கு எனக்கு பயமாக இருக்கிறது.”
இந்த வார்த்தைகள் ஹாங்காங் மக்களின் வாயிலிருந்து வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுவும் 17 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களிடமிருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மிகச் சமீப காலம் வரை சாதாரணமான ஹாங்காங் பதின்ம வயது இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபடும் முனைப்போ, புதுமையாக சிந்திக்க வேண்டும் என்றோ நினைக்காமல் ஒரே மாதிரியாக அனைவருக்குமே படிக்க வேண்டும் என்றோ அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோதான் எண்ணம் வரும்.
ஆனால், கடந்த வாரம் ஹாங்காங் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளை முகமூடி அணிந்த இளைஞர்கள் முற்றுகையிட்டு, வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதையும், காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகைக் குண்டுகளை மீண்டும் அவர்கள் மீதே திரும்ப வீசியதையும் காண முடிந்தது.
இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற, சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடும் ‘குடை போராட்டத்தில்’ (Umbrella protests) பங்கேற்றவர்களின் வயதைவிட மிகவும் இளையவர்களாக இருந்திருப்பார்கள். இந்த குடை போராட்டம் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தக்கோரி பல்லாயிரக்கணக்கானோரை தெருக்களில் இறங்கிப் போராடவும் உறங்கவும் வைத்தது.
சீனாவின் வருங்காலம் குறித்த அச்சம்
நகர மையத்தை கைப்பற்றும் போராட்டம் என்றும் அழைக்கப்படும் 2014 போராட்டங்கள் அரசின் எவ்விதத்திலும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமலேயே முடிவுக்கு வந்தது. ஆனால் இந்தமுறை நிலைமை வேறாக இருந்தது.
சமீபத்திய போராட்டங்கள், சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவிற்கு எதிராக நடைபெற்றன. இந்த சட்டம், குற்றப்பின்னணி உள்ள எந்த ஒரு ஹாங்காங் வாசியையும் விசாரணைக்காக சீனாவிற்கு நாடு கடத்த வகை செய்யும்.
இந்த போராட்டம் காரணமாக அரசு மன்னிப்பு கேட்டது. சர்ச்சைக்குரிய சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தியது. இது இந்த சட்டத்தை கிடப்பில் போடப்பட்டதற்கு சமம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த முறை மட்டும் ஏன் இப்படி ஆனது? கண்ணீர் வெடிகுண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் எதிர்கொள்ள, ஏன் கைதாகவும் (அவர்களுக்கு வருங்கால வேலை வாய்ப்பு பிரச்சனையும் இருக்கிறது) இளைஞர்களை எப்படி தயார் செய்தது?
ஹாங்காங் இளைஞர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக ஒருவகையான அரசியல் விழிப்புணர்வை பெற்று வருகின்றனர். 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் இடையேயான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2008ல் 58% ஆக இருந்த நிலையில் 2016ல் 70% ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங்கின் அரசியல் எதிர்காலம் முக்கியமான பிரச்சனை என்று நீங்கள் கருதினால், இது ஒன்றும் வியப்பில்லை.
ஹாங்காங் பிரதேசம் தற்போது சிறப்பு உரிமைகளையும் சுதந்திரங்களையும் முன்பு காலனி ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்திடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது இங்கிலாந்திற்கும் சீனாவிற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் காரணமாக அனுபவித்து வருகிறது.
ஆனால் 2047ல் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து காலாவதியாகும் என்று இந்த ஒப்பந்தம் தெரிவிக்கிறது. அதன் பின் என்ன ஆகும் என்று யாருக்கும் உண்மையில் தெரியாது.
இன்றைய இளைஞர்களுக்கு 2047 மிகவும் அருகில் உள்ளது. அவர்கள் போராட்டம் இந்த நிலையற்ற தன்மை மற்றும் சீன அரசும் தங்களை நெருங்கிவருகிறது என்ற உணர்வால் தூண்டப்பட்டே இருக்கிறது.
இந்த அமைப்பு முறை அவர்களை ஒருபோதும் பாதுகாக்காது என்பதால் அவர்கள் தங்கள் போராட்ட உத்திகளை மாற்றி வருகிறார்கள். நவீன முறையிலான அதிருப்தியை வெளிப்படுத்தும் கலையை கற்று வருகிறார்கள்.
கடந்த வாரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நான் பேட்டி கண்ட ஒவ்வொரு போராட்டக்காரரும் கைதாவதற்கு அஞ்சி தங்கள் பெயரையும் அடையாளத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
“இந்த போராட்டத்தின்போது எல்லா நேரத்திலும் நாங்கள் எங்கள் முகத்தை முகமூடி அணிந்து மறைத்திருந்தோம், அதன் பின் நாங்கள் எங்கள் ஐபோன்கள் மற்றும் கூகுள் மேம்புகளில் எங்களைப்பற்றிய தரவுகளை நாங்கள் அழிக்க முற்பட்டோம்,” என்கிறார் டேன். இந்த போராட்டத்தின்போது வேலிகளால் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவிய 18 வயது இளைஞர் இவர்.
‘கழிவுநீரே இனி குடிநீர்’: தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்
அவர்களில் சிலர் தங்கள் பிரிபெய்டு பயண அட்டையை பயன்படுத்தாமல், ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளை வாங்கி பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்பட வேண்டும் என்பதற்காக.
சமூக வலைத்தளங்களில் தாங்கள் என்ன சொல்கிறோம் என்பதில் பெரும்பாலானோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தனர். பெரும்பாலானோர், டெலிகிராம் போன்ற தரவுகளை சுயமாக அழிக்கக்கூடிய செயல்பாடுகள் கொண்ட பாதுகாப்பான செயலிகள் மூலம் தொடர்புகொள்ளவே விரும்பினர்.
“2014ஆம் நடந்த போராட்டத்தின்போது பெரும்பாலானோர், தங்களை பாதுகாக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை, நாங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றை பயன்படுத்தி தகவல்களை பரப்பினோம். ஆனால் இந்த ஆண்டு கருத்து சுதந்திரம் ஹாங்காங்கில் மிகவும் மோசமடைந்துள்ளதை நாங்கள் பார்க்கிறோம்,” என்கிறார், ஜாக்கி என்ற 20 வயது நிரம்பிய மாணவர் தலைவர்.
நொறுங்கிய உறவு
ஹாங்காங்கின் மிகவும் பெருமைக்குரிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெலிகிராம் மூலம் போராட்டம் பற்றிய தகவல் பரிமாறிக்கொள்ளும் குழு ஒன்றின் நிர்வாகி என சந்தேகிக்கப்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர் பொது அமைதிக்கு தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர் தலைவர்கள் அவர்கள் உயர் பொறுப்புகள் காரணமாக கைது செய்யப்படக்கூடும் என்று ஜாக்கி அஞ்சுகிறார்.
“நான் வீட்டிற்கு சென்றால் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் நான் மாணவர் சங்க அலுவலகத்திலேயே உறங்கிவருகிறேன்,” என்கிறார் அவர்.
இது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுடன் நொறுங்கிப்போன உறவையே காட்டுகிறது. கடந்த முறை நடைபெற்ற போராட்டத்துடன் ஒப்பிடுகையில் போராட்டக்காரர்களுக்கு காவல் துறையினர் மீதுள்ள நம்பிக்கை குறைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, போலீசார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியில் மாணவர்கள் படுக்கையறைகளை சோதனையிட திட்டமிட்டுள்ளனர் என்ற வதந்தி பரவியது. அதற்கு முன்தினம் இரு மாணவர்கள் அங்கிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த பதற்றத்தின் ஊடே மாணவர்கள் துரிதமாக உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களையும் வழக்கறிஞர்களையும் தொடர்புகொண்டனர். அவர்கள் அந்த கட்டடத்தை சூழ்ந்து கொண்டதால், இறுதியில் போலீசார் விடுதியின் கூடத்திற்குள் நுழையவில்லை.
நேஷனல் ஜியாகிரஃபிக் போட்டியில் முதல் பரிசை வென்ற படம் இதுதான்
2014 போராட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை தாக்கியதால் ஏராளமான காவல்துறையினர் சிறைபிடிக்கப்பட்டதையடுத்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காவல்துறையினர் மீதான நம்பிக்கை போய்விட்டதாக டேன் சொல்கிறார்.
“அதற்கு முன்புவரை காவல்துறையினர் என்றால் சட்டத்தை மதித்து நடப்பவர்கள், குடிமக்களுக்கு உதவுபவர்கள் என்று நான் நம்பினேன். ஆனால் சில காவலர்கள் தங்கள் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நான் உணர்ந்தகொண்டேன்.”
முந்தைய தலைமுறை போராட்டக்காரர்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், நல்ல காரியத்திற்காக மக்கள் ஒன்று கூடும் சட்டத்தை மீறி கைதாகத் தயாராக இருக்கிறர்கள் என்பதையே காண முடிகிறது.
அவர்கள் போராட வேண்டியது இன்னும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மிகவும் மோசமான அரசியல் சூழலில் அவர்கள் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
டாமின் வயது 20, இவர் கடந்த புதன்கிழமை போராட்டத்தின் போது தேவையானவற்றை வழங்க உதவினார். நான் வளர்ந்து வரும் காலகட்டம் காரணமாக தான் போராட்ட ஆதரவாளராக மாறிவிட்டதாக அவர் கூறுகிறார்.
சீன நாட்டுப்பற்று வகுப்புகளை மாணவர்கள் கற்கவேண்டும் என்ற 2012 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட அரசியல் அமளிகள் போன்ற சூழலில் தனது தலைமுறை வளர்ந்துவருவதாக அவர் கூறுகிறார். அரசின் அந்த திட்டம் மாணவர்களை மூளைச் சலவை செய்து சீன அரசின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் நாங்கள் பெற்று வந்த சுதந்திரத்தை நசுக்கும் விதமாக இருப்பதை நான் பார்க்கிறேன். இதன் காரணமாக ஹாங்காங் தனது சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரங்களை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அரசின் கொள்கைகள் மீது புகார் கூறும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமீபத்தில் சீன அரசு அறிமுகப்படுத்திய புதிய சட்டமான, சீன தேசிய கீதத்தை அவமதிப்பவர்களை தண்டிக்கும் சட்டத்தை, ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விடுதலைக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களை தகுதியழக்கச்செய்தல் மற்றும் விடுதலை ஆதரவு போராட்டக்காரர்களை சிறையில் அடைத்ததைக் குறிப்பிடுகிறார்கள்.
கைப்பற்று போராட்டம் தெளிவான- சிக்கல் நிறைந்த கொடையை இன்றைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விட்டுச் சென்றுள்ளது.
கடந்த வார போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர். 2014 போராட்டத்தில் பங்கேற்க முடியாத அளவு மிகவும் வயது குறைந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் அந்த போராட்டத்தின் போது கற்றுக்கொண்ட பாடத்தினால் உந்தப்பட்டுள்ளனர்.
பென், வயது 20 சொல்கிறார், தனது பெற்றோர் 2014 போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது பல்கலைக்கழக மாணவனாக தான் போராட்டங்களை நடத்துவதிலும், கைதாகக்கூடும் என்ற அபாயத்தில் உள்ள மாணவர்களுக்க சட்ட உதவிகளை வழங்குவதில் முன்னிலை வகிப்பதாக கூறுகிறார்.
2014 போராட்டம் தோல்வியில் முடிந்த போராட்டம் என்று கூறும் அவர், போராட்டக்காரர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்த மாறுபட்ட கருத்துகளை கொண்டிருந்ததாகவும், அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்கிறார்.
ஆனால் இந்த முறை இந்த போராட்டம் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுதல் ஜனநாயகம் கோரவில்லை, ஹாங்காங் தற்போது அனுபவித்துவரும் உரிமைகளை தக்கவைக்க போராடுவதாக அவர் கூறினார்.
ஒற்றுமையுடன் இருப்பதில் அதிக பலன் இருக்கிறது. ஏனெனில் போராட்டக்காரர்கள் தங்களது தற்போதைய சுதந்திரத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக போராடுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
கைப்பற்று போராட்டம் அதிக அளவு இளைஞர்களை அரசியலில் ஈடுபட தூண்டியது என்றும், தாங்களே தெருவில் இறங்கி போராட வேண்டும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை போராட்டத்தின் போது முதலுதவி மையம் ஒன்றை நடத்த உதவிய ஜாக்கி, இந்த போராட்டம் தனக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார்.
முன்பு தனக்கு அரசியிலில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது என்று கூறும் அவர், இந்த போராட்டத்தையடுத்து, அரசியல் எவ்வளவு முக்கியம் என்பதை உணரவைத்ததாக குறிப்பிடுகிறார்.
இந்த போராட்டம், இன்றைய இளைஞர்களுக்கு காவல்துறையினருடன் மோதலை எதிர்கொள்ள தயார்ப்படுத்த உதவியுள்ளது.
ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஏராளமான பைகளில் மருந்துகளையும், சுவாச கருவிகளையும் வாங்கிக் குவித்து இருந்தனர். போலீசார் தாக்குதலின் போது கண்ணீர்புகைக் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மிளகுத்தூள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தங்கள் கண்களைக் கழுவிக்கொள்வதற்கும் இவை உதவின.
இவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதன் பொருள், கடந்த புதன் கிழமை போராட்டத்தின் போது நிலைமை மோசமடைந்த நிலையிலும் கூட்டத்தினரை போராட்டக் களத்தில் இருக்க வைக்க உதவியது.
இந்த போராட்டங்கள் குறித்து அவர்கள் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள்? கருத்தகள் மாறுபடுகின்றன.
இன்கிரிட் 21, தனது வேலையை முடித்து விட்டு புதன்கிழமை போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தின் முன்வரிசையில் இருப்பவர்களுக்கு முதல்உதவிப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் கூறுகிறார், அவரதுபெற்றோர் காவல்துறையினருக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் தன்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர் என்றும் கூறுகிறார். சில நாட்கள் கழித்து வீட்டுக்கு வர அனுமதித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.
அதே நேரம் ஜாக்கி, தன் பெற்றோரிடமோ, தாத்தா பாட்டியிடமோ, இந்த போராட்டத்தில் தனது பங்கு குறித்து சொல்லும் துணிவு தனக்கு இல்லை என்கிறார். ஆனால், செய்தியில் அவரைப்பார்த்த பின்னர் அவர்கள் ஆதரவு அளித்தனர் என்றும், பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
இந்த போராட்டத்தை முழுமையாக இளைஞர்களின் போராட்டம் என்று கூறினால் அது தவறு.
தலைவர் கேரி லேம் பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடியை சந்தித்தார். வர்த்தக அமைப்புகள், அவருடைய தேவாலயம் மற்றும் அவருடைய பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து நெருக்கடி வந்தது.
இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக செயின்ட் பிரான்சிஸ் கனோசியன் கல்லூரி உள்பட நூற்றுக்கணக்கான குழுக்கள் மனுக்களை வழங்கின. ஹாங்காங்கின் முக்கியமான பள்ளிகளில் ஒன்றும் பெருமைக்குரிய பள்ளியில் இருந்து எதிர்ப்பு குரல் வந்தது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
ஆப்ரே தாவ் என்ற 22 வயது பள்ளியின் முன்னாள் மாணவி தான் இந்த மனுவில் கையெழுத்திட்டார். தலைவர் லேம் பள்ளியின் குறிக்கோளை அடிக்கடி தன் உரையில் மேற்கோள் காட்டுவார்,. பிரான்கேசியனாக நீங்கள் இந்த வகையில் ஆட்சி செய்யக்கூடாது என்றார் ஆப்ரே.
ஆனால், சட்ட விரோதமான, இளைஞர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, அவர்கள் முகாமிட்டு போராடியதன் காரணமாக, காவல்துறையுடன் அவர்கள் மோதியதன் காரணமாகவே அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மசோதாவை நிறுத்தியதற்கு முக்கியமான காரணம்.
பெரும்பாலானோர், மாணவர்களை கண்டித்து இருப்பார்கள். கடந்த காலங்களில் வன்முறையாக மாறிய போரட்டங்களின் போதும் அவர்கள் இப்படித்தான் கண்டித்துள்ளனர்.
ஆனால் இந்த முறை காவல்துறை மிகவும் அத்துமீறியதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்த மோதல்களின் போது காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களை, பீன்பேக் ஷாட்டுகளை பயன்படுத்தியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். 79 நாட்கள் நடைபெற்ற குடை போராட்டத்தின் போது பயன்படுத்தியதை விட அதிகம் இதுவாகும்.
வன்முறையை கட்டுப்படுத்த இவற்றை பயன்படுத்த வேண்டியது அவசியமானது என்று காவல்துறை தனது தரப்பினை நியாயப்படுத்துகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகளை செங்கற்கள் மற்றம் இரும்பு பைப்புகளால் தாக்கினார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
பிபிசியிடம் பேசிய சில ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டிகள் கம்புகள் போன்றவற்றை பிறர் வீசியதை தாங்கள் பார்த்ததாக கூறுகிறார்கள்.
என்ன இருந்தாலும் மாணவர்கள் மீது மிளகுத்தூள் தூவியது மற்றும் அதிக அளவில் கண்ணீர்புகை குண்டுகளை வீசியது இன்னும் பலருக்கு அதிகாரிகள் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையை ஆதரித்த லேம் மீதும் கோபப்பட்டுள்ளனர்.
வைரலாக பரவிய ஒரு வீடியோவில் நடுத்தர வயதுடைய ஒரு பெண் காவலர்களைப் பார்த்து, நீங்களும் ஒருநாள் அப்பாவாக போகிறவர்கள் என்று அலறினார்.
இந்த மோதலையடுத்து, கிறிஸ்தவ தேவாலய குழுக்கள் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து தெருவில் இறங்கி, பல மணி நேரங்களுக்க காவல்துறையினருக்கு எதிராக அல்லேலூயா என்று பாடினார்கள்.
பெண்கள் பங்கேற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டனர். எங்கள் குழந்தைகளை சுடாதீர்கள் என்பன உள்ளிட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
மக்கள் கொந்தளிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும், முன்னாள் அரசு அதிகாரிகளும் வாய் திறந்தனர். தலைவர் லேம், இந்த சட்டத்தை இந்த கொந்தளிப்பான நேரத்தில் நிறைவேற்ற அவசரப்படக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
சீனாவிற்கு ஆதரவான சில சட்டமன்ற உறுப்பினர்களும், இந்த மசோதாவை தாக்கல் செய்வதை தாமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த சட்ட மசோதா குறித்த மக்கள் உணர்வை தாங்கள் குறைத்து மதிப்பிட்டதாக அவர்கள் கூறினர். ஹாங்காங் சட்டமன்றத்தில் உறுப்பினர்களில் பாதிபேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். சீன ஆதரவு குழுக்கள் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இனி ஹாங்காங் என்ன செய்யும் என்று தெளிவாக தெரியவில்லை. லேம், கடந்த சனிக்கிழமை கூறுகையில் இந்த சட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என்றார். இருப்பினும் ஏராளமான மக்கள் ஞாயிற்றுக்கிழமையன்று வீதிகளில் குவிந்தனர். இந்த சட்ட மசோதா நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் முதல் முறையாக போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவித்தனர். காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டித்து தாங்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாகவும், இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக போராடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா – இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா
ஹாங்காங் போராட்டத்தின் போக்கையே சம்பவங்கள் மாற்றிவிட்டன என்பது தெளிவாக காட்டுகிறது.
நாடுகடத்துவதற்கு எதிரான இயக்கம் கடந்த 30 ஆண்டு கால போராட்ட பாரம்பரியத்தை உடைத்துள்ளது என்கிறார் டாம்.
காவல் துறையினர் முன் மணிக்கணக்கில் பாடல்களை பாடுவோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார். தாய்மார்கள் போராட்டத்தில் குதித்தது, செய்தியாளர்கள் வன்முறை உடைகளை அணிந்து அமைதியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து பலனளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
தன் வாழ்நாளில் முதல்முறையாக கண்ணீர் வெடிகுண்டினை எதிர்கொண்டதாக இன்கிரிட் கூறுகிறார். இந்த அனுபவம் வேதனைப்படுத்தும் விதமாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
கண்ணீர் புகை குண்டு என்னை தாக்கியது. என்னால் பார்க்க முடியவில்லை. நான் உடை அணிந்திருந்தேன். ஆனால் உடலில் தண்ணீர் பட்டதும் எரிச்சல் ஏற்பட்டது. கண்ணீர் புகை மருந்து தண்ணீர் பட்டதும் வேதியல் மாற்றத்திற்கு உள்ளானது. கண்ணீர் புகைக் குண்டின் குமிழ் திறக்கும் ஓசையை மீண்டும் கேட்க விரும்பவில்லை ” என்று அவர் கூறுகிறார்.
ஆனாலும் தான் தொடர்ந்து போராடப்போவதாக கூறினார்.
“நான் என் வீடு என்று அழைக்கும் இந்த நகரம் எப்படி மாறிவிடும் என்ற கவலை உணர்வே என் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றிய கவலையையும் விட அதிகமாக உள்ளது”
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. -BBC_Tamil