இமாயல பனிமலைகள் – பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து

இமாலய பனிமலைகளில் மிகப்பெரிய அளவில் பனி உருகி வருவது பனிப்போரின் போது உளவுப்பார்க்க பயன்படுத்த செயற்கைக்கோள்களின் புகைப்படத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் உளவுப்பார்க்கும் திட்டத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமீபத்திய விண்வெளி ஆய்வுகளையும் ஒப்பிட்டு, கடந்த 40 வருடங்களில் இமாலய பனிமலைகளில் உள்ள பனிப்படலம் உருகுவது இரு மடங்காகியுள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

2000ஆம் ஆண்டிலிருந்து பனிமலைகளின் உயரம் ஒரு வருடத்தின் சராசரியாக 0.5மீட்டர் என குறைந்து வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதற்கு பருவநிலை மாற்றமே ஒரு முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த புகைப்படங்களின் மூலம் இமாலய பனி மலைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. ” என கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோஷுவா மாரெர் பிபிசியிடன் தெரிவித்தார்.

இமாலயப்பனிப்படலம்

1970 மற்றும் 1980களில் அமெரிக்க உளவுத் திட்டத்தின்படி பூமியை ரகசியமாக படம்பிடிக்க சுற்றுவட்ட பாதைக்குள் 20 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.

ஃபிலிம் ரோல்களில் புகைப்படம் எடுக்கப்பட்ட அதனை செயற்கைக்கோள் வெளிமண்டலத்துக்கு அனுப்பிவிடும், அது நடுவானில் ராணுவ விமானங்களால் பெறப்படும்.

2011ஆம் ஆண்டு இந்த புகைப்படங்கள் டிஜிட்டைஸ் செய்யப்பட்டது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமீபமாக நாசா மற்றும் ஜப்பான் விண்வெளி முகமையால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு இமாலய பனிமலைகளில் ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் கண்டறியப்பட்டன. -BBC_Tamil