அமெரிக்க உளவு விமானம்: ‘இரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு திரும்பப்பெற்ற டிரம்ப்’

தனது நாட்டின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இரானின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கான தொடக்க கட்ட வேலையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டிருந்த போது, தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்ததாக அந்த செய்தி விவரிக்கிறது. ஆனால், இதுதொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

எனினும், இதுமனித தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறிய அதிபர், இரான் வேண்டுமென்றே செய்திருக்கும் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் இரானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இரான் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், இரானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா இரான் நாட்டு பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டும் இரனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஸாரிஃப், ஐ.நா சபையில் அமெரிக்கா மீது புகார் ஒன்றையும் தர போவதாக தெரிவித்துள்ளார்.

இரான் நாட்டை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் உளவு பார்க்கும் நோக்கில் பறந்ததாக இரானின் ஐ.நாவுக்கான தூதர் மஜித் தக் ரவஞ்சி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தின் ஒரு அப்பட்டமான விதிமீறல் என்றும் மஜித் அமெரிக்காவை சாடியுள்ளார்.

ஐ.நாவின் பொது செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபைக்கு மஜித் எழுதியுள்ள கடிதத்தில், இரான் எல்லையை பாதுகாக்கும் விதத்தில் விரோத செயல்களை முறியடிக்கும் முழு உரிமை இரானுக்கு இருக்கிறது என்றும், இரான் போரை விரும்பவில்லை என்றும் மஜித் குறிப்பிட்டுள்ளார்.

US NAVY/KELLY SCHINDLE

என்ன நடந்தது?

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கும், இரானுக்கும் நடுவில் தற்போது இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹார்மோஸ் ஜலசந்தி மேல்

திங்கட்கிழமையன்று கூடுதலாக ஆயிரம் படைவீரர்களை இரானிய படைகளுக்கு எதிராக அந்த பகுதியில் நிறுத்திவைப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறியிருந்தது.

கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தங்களுடைய எல்லை பகுதியில் வந்ததால்தான் சுட்டு வீழ்த்தினோம் என இரானிய ராணுவம் கூறியதாக இரானிய பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரானிய உயர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் புதனன்று இரான் எந்தவித எல்லைமீறலையும் பொறுக்காது என் எச்சரித்தார்.

எங்களுடைய வான்வெளி எல்லை தான் எச்சரிக்கை கோடு ,அதை மீறினால் இரான் அதற்கு பதிலடி கொடுக்கும் என டாஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார் அலி ஷம்கஹ்னி. -BBC_Tamil