மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, கடந்த ஜூலை 2013 -ல் அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.
இதனிடையே வழக்கு விசாரணைக்காக மோர்சி கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்ற அறையில் 20 நிமிடங்கள் நெஞ்சுவலியால் துடித்த மோர்சிக்கு, யாரும் உதவவில்லை. இதனால் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என தான் கூறுவதாக எர்டோகன் தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் ஜப்பானில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் இந்த விவகாரம் குறித்து எர்டோகன் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-athirvu.in