இரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது
இந்த தாக்குதல் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணிணி அமைப்புகள் மீது நடத்தப்பட்டன என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மற்றும் எண்ணெய் டாங்கர்களை தாக்கியது ஆகியவற்றிற்கு பதில் நடவடிக்கை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இரானிய கணிணி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தன்னிச்சையாக உறுதி செய்ய முடியவில்லை.
அமெரிக்கா இரான் மீது தடைகளையும் விதித்திருந்தது.
அணுஆயுதங்களை இரான் பெறுவதை நிறுத்த இந்த தடைகள் தேவை எனவும், இரான் தனது நிலையை மாற்றிக் கொள்ளாதவரை பொருளாதார அழுத்தங்கள் தொடரும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- ‘இரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு திரும்பப்பெற்ற டிரம்ப்’
- போர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை
ஜெருசலத்தில் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், புதிய தடைகள் குறித்தான விவரங்கள் திங்களன்று அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து கடந்த வருடம் அமெரிக்கா வெளியேறிய பிறகு அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பதற்றத்தை அது மேலும் அதிகரித்தது.
கடந்த வாரம் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட அளவைக் காட்டிலும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அதிக அளவில் சேமித்து வைக்கப்போவதாக இரான் தெரிவித்திருந்தது.
போரை தான் விரும்பவில்லை என்றும் ஆனால் போர் தொடுத்தால் இரான் ’அழிந்துவிடும்’ என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
என்ன சொன்னார் டிரம்ப்?
இந்த சைபர் தாக்குதல் குறித்து டிரம்ப் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வெள்ளியன்று, இரான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்ததாகவும். தன்னுடைய அனுமதிக்காக காத்திருந்ததாகவும். ஆனால், இதில் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று ராணுவ ஜெனரல்களிடம் கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
“ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தேன். அவர்கள் ஓர் ஆளில்லாத விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள், ஆனால் இத்தாக்குதல் நடத்த நான் அனுமதி அளித்திருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் 150 பேர் உயிரிழந்திருப்பார்கள்” என்று என்பிசியிடம் பேசிய டிரம்ப் கூறினார்.
இரானை தாக்க ஏற்கனவே அப்போது விமானங்கள் அனுப்பபட்டது என்ற செய்திகளையும் அவர் மறுத்தார்.
என்ன நடந்தது?
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறியுள்ளது.
இரான் நாட்டை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் உளவு பார்க்கும் நோக்கில் பறந்ததாக இரானின் ஐ.நாவுக்கான தூதர் மஜித் தக் ரவஞ்சி தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தின் ஒரு அப்பட்டமான விதிமீறல் என்றும் மஜித் அமெரிக்காவை சாடியிருந்தார். -BBC_Tamil