ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உத்தரவின்படி பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை வரும் அக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த சர்வதேச நிதி நிறுவனம் கெடு விதித்துள்ளது.
சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எப்.ஏ.டி.எப்.) கூட்டம் அமெரிக்காவில் ஓர்லாண்டோ மற்றும் புளோரிடாவில் கடந்த 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது.
அதில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சமீபத்தில் ஹபீஸ் சயீத், மவுலானா மசூத் அசார் மற்றும் சிலரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து அறிவித்தது. அதன்படி அவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்த வேண்டும். அவர்களின் பயங்கரவாத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் ஹபீஸ் சயீத், மவுலானா மசூத் அசார் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நிதி உதவி செய்யப்படுகின்றன என குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா, பலா-இ- இன்சானியத் அறக்கட்டளை மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமான 700 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என வாதிட்டது.
அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அங்கம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட பல உறுப்பு நாடுகள் தெரிவித்தன. அதை தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பாகிஸ்தான் அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. ஏனெனில் பயங்கரவாதிகளின் முகாம்கள், ஆயுத கிடங்குகள், வெடி பொருட்கள் மற்றும் சொத்துக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை பாகிஸ்தான் வழங்க வேண்டும் என நிதி நடவடிக்கை பணிக்குழு கெடு விதித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உத்தரவின்படி பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை வருகிற அக்டோபருக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் பாகிஸ்தான் தொடர்ந்து கருப்பு பட்டியலில் இடம் பெறும்.
அதனால் சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து பாகிஸ்தானால் கடன் உதவி பெற முடியாது என எச்சரிக்கை விடுத்தது.
நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானை ஏற்கனவே கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பாகிஸ்தானுக்கு மேலும் நிதிச்சுமை ஏற்படும். அந்நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்படும்.
-athirvu.in