எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி சுட்டுக்கொலை!

எத்தியோப்பியா அரசுக்கு எதிராக வன்முறை பெருகிவரும் நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதி மற்றும் அம்ஹாரா மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இதையடுத்து அங்குள்ள அம்ஹாரா உள்ளிட்ட சில பகுதிகளில் இன வன்முறை அதிகரித்தது.

இதன் எதிரொலியாக அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நேற்று அபிய் அஹமத் தலைமையிலான அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல், அம்ஹாரா மாகாண கவர்னரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அம்ஹாரா பகுதியில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னாள் ராணுவ தளபதி தான் காரணம் என ஆளும்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

-athirvu.in