கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது.

இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒட்டுமொத்த கட்டிடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 50 தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 7 பிரேதங்களும் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் முதல் கட்டமாக செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோர்களில் சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

-athirvu.in