அமெரிக்க குடியேற்றம்: அதிர்ச்சியில் ஆழ்த்திய உயிரிழந்த தந்தை – மகளின் புகைப்படம் – என்ன நடக்கிறது?

அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை – மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது.

தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில் மூழ்கியவாறு வெளியான புகைப்படம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இதனை நான் வெறுக்கிறேன்” என்று இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை தடுக்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடுமையான கொள்கைகளை அமல்படுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் பலரும் மத்திய அமெரிக்கா பகுதியை சேர்ந்தவர்கள். சமீபத்திய நாட்களில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹாண்டுரூஸ், குவாட்டமாலா மற்றும் எல் சல்வேடார் பகுதிகளில் நிலவும் வன்முறை மற்றும் ஏழ்மை காரணமாக, அங்கிருந்து வெளியேறுவதாக பல குடியேறிகள் தெரிவிக்கிறார்கள். இதனால்தான் அமெரிக்காவில் அவர்கள் புகலிடம் கோருகிறார்கள்.

குடியேற்றம் தொடர்பாக அதிபர் டிரம்பின் கடுமையான நிலைப்பாடே குடியேறிகளை இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வைப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க எல்லை ரோந்து படையினரின் தரவுகள்படி, 2018ஆம் ஆண்டில் அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் குறைந்தது 283 குடியேறிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகளவில் இருக்கலாம் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

25 வயதான ஆஸ்கர் அல்பர்டே மார்டினிஸ் ரமிரெஸ் மற்றும் அவரது மகள் வெலேரியா இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மடமொரொஸ் என்ற பகுதியை கடக்க முயற்சித்துள்ளனர். வட மெக்ஸிகோ மாகாணமான டமோலீபாஸில் உள்ள இப்பகுதியில் இருந்து அமெரிக்காவின் டெக்ஸாசிற்கு செல்ல முடியும்.

ரியோ கிராண்டே நதியின் ஆபத்தான நீரோட்டத்தால் அடித்து செல்லப்பட்ட தந்தை மற்றும மகள்
ரியோ கிராண்டே நதியின் ஆபத்தான நீரோட்டத்தால் அடித்து செல்லப்பட்ட தந்தை மற்றும மகள்

மேலே உள்ள இந்தப் புகைப்படம் ஜுலியா லி டக் என்ற செய்தியாளரால் படம் பிடிக்கப்பட்டு, மெக்ஸிகோ நாளிதழான லா ஜொர்னடாவில் வெளியானது.

“இந்தப் புகைப்படத்தை பார்த்த பிறகு, இதனை தடுக்க யாரேனும் எதாவது செய்வார்கள் என்று நம்புகிறேன். இது போன்று நதியில் மூழ்கி இறக்கும் குடியேறிகளை இனி இப்படி புகைப்படம் எடுப்பது தொடரக்கூடாது” என்று பிபிசியிடம் பேசிய அந்த செய்தியாளர் தெரிவித்தார்.

அக்குழந்தையின் தாய் என்ன சொல்கிறார்?

ரமிரெஸின் மனைவியும், அக்குழந்தையின் தாயுமான டனியா வெனெசா அவலொஸ், தங்கள் குடும்பம் கடந்த இரண்டு மாதங்களாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் விசாவில் மெக்ஸிகோவில் இருந்ததாக ஏபி செய்தி முகமையிடம் அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 21.

அமெரிக்க அதிகாரிகளை எதிர்கொண்டு புகலிடம் கோர முடியாமல் விரக்தியடைந்த அவர்கள், நதியை கடந்து அமெரிக்கா செல்ல முடிவு செய்தனர்.

மகளுடன் நதியை கடந்த ரமிரெஸ், அக்குழந்தைகயை கரையில் விட்டுவிட்டு, தன்னை கூட்டிச் செல்ல வந்ததாக, அவர் மெக்ஸிகோ போலீஸாரிடம் கூறியுள்ளார்.

மேப்

ஆனால் கரையில் தனியாக அமர்ந்திருந்த குழந்தை வெலேரியா பயந்து போய் தந்தை தண்ணீரில் குதித்த உடனே அவரும் குதித்துள்ளார். பிறகு குழந்தையை தந்தை காப்பாற்றினாலும், இருவரும் நதியின் ஆபத்தான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

“நான் அவர்களை போக வேண்டாம் என்று கெஞ்சினேன். ஆனால் கொஞ்சம் காசு சேர்த்து வைத்து வீடு கட்ட வேண்டும் என்று அவர் கூறினார்” என ஆஸ்கரின் தாய் ரோசா ரமிரெஸ் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

Presentational grey line
Presentational grey line

எச்சரிக்கை

மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக குடியேற வேண்டாம் என்று எல் சல்வேடாரின் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் அலெக்சாண்டரா ஹில் எச்சரித்துள்ளார்.

உயிரிழந்த தந்தை மற்றும் மகளை மீட்டுக் கொண்டு வரும் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர்களது உறவினர்களுக்கு தேவையான ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான உயிரிழப்புகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக குறிப்பிட்ட மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடார், இதுபோன்று ஆபத்தான விதத்தில் எல்லையை கடக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

“மக்கள் இவ்வாறு ரியோ கிராண்டே நதியை கடக்கும்போதோ, அல்லது பாலைவனத்திலோ உயிரிழக்கிறார்கள். நாங்கள் இதனை ஏற்கனவே கண்டித்துள்ளோம். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள போப் பிராண்சிஸ், இது வருந்தத்தக்கது என்றும் குடியேற்றத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக வேண்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது என்ன?

டிரம்ப்

அதிர்ச்சி அளிக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இதனை நான் வெறுக்கிறேன்” என்று கூறினார்.

“அந்தத் தந்தை… மிகவும் அற்புதமான மனிதராக இருந்திருப்பார்.”

“மிக மிக ஆபத்தான பயணம். இது மட்டுமல்லாது பல விஷயங்கள் நடந்திருக்கிறது. பல பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தன்னுடைய குடியேற்றக் கொள்கைகளை ஜனநாயகவாதிகள் ஆதரிக்க மறுப்பதே இப்படி சட்டவிரோத குடியேறிகள் உயிரிழக்கக் காரணம் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சிரியா போரின் போது உயிரிழந்து அடையாளமாக இருந்த அலன் குர்தி என்ற சிறுவனின் புகைப்படத்தோடு, இப்படம் ஒப்பிடப்படுகிறது.

-BBC_Tamil