அமெரிக்காவுடன் போர் நடத்த நாங்கள் விரும்பவில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.
முன்னதாக, ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப்படைக்கு உத்தரவிட்ட டிரம்ப் கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அமெரிக்காவுடன் போர் நடத்த நாங்கள் விரும்பவில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடியபோது தனது எண்ணத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்ட ரவுகானி, ‘மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யவும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுடனும் போர் நடத்தவும் ஈரான் எப்போதுமே விரும்பியதில்லை.
எங்கள் பிராந்தியத்தின் நிரந்தரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டும் குறிக்கோளை எய்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் ஈரான் அரசு மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
-athirvu.in