ஆப்கானிஸ்தான் – தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் அரசுக்கு ஆதரவான தன்னார்வலர்கள் படையை சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாக்லான் மாகாணத்துக்கு உட்பட்ட நஹ்ரின் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரை நேற்று தலிபான் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டு சிறைபிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

அவர்களை மீட்பதற்காக அரசுக்கு ஆதரவான தன்னார்வலர்கள் படை அங்கு விரைந்தது. தலிபான்களுக்கும் தன்னார்வலர்கள் படைக்கும் இடையில் இன்று அதிகாலை தொடங்கி சுமார் 6 மணிநேரம் நீடித்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டதாக நஹ்ரின் மாவட்ட கவர்னர் பசலுதின் முராடி தெரிவித்துள்ளார்.

-athirvu.in