ஈரானை சுற்றி பெருகும் பதற்றத்தை தணிக்க ஜி-20 தலைவர்கள் முடிவு!

பாரசீக வளைகுடாவில் பெருகிவரும் பதற்றம் தவிர்க்கப்பட வேண்டும் என ஜி20 நாடுகளின் தலைவர்கள் இன்று வலியுறுத்தினர்.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

முன்னதாக, ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப்படைக்கு உத்தரவிட்ட டிரம்ப் கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் தெரசா மே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘ஈரான் விவகாரத்தில் பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

பதற்றம் அதிகரிப்பதில் யாருக்கும் விருப்பமில்லை. அங்கு பதற்றத்தை தணிக்கவும், ஈரானை நிலைகுலைய வைக்கும் செயல்களை தடுக்கவும் ராஜதந்திரமான அணுகுமுறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றே உலகத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

அதேவேளையில், ஈரானுடனான அணு ஒப்பந்தம் தொடர்பான கூட்டு செயல்திட்டத்தை நிறைவேற்ற எங்களது நட்பு நாடுகளுடன் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

-athirvu.in