இரான் அணுசக்தி ஒப்பந்தம் – ஒப்பந்த விதிகளை இரான் மீறியதை உறுதி செய்தது சர்வதேச கண்காணிப்பகம்

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரம்பை மீறியதை சர்வதேச கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.

300 கிலோவுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருக்கக்கூடாது எனும் ஒப்பந்தம் மீறப்பட்டதை தனது மேற்பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான் அணு உலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்பந்தத்தை கைவிட்டு மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ள சூழலில் அதற்கு பதிலடியாக இரான் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

அணுசக்தி ஒப்பந்தத்தில் இரான் எந்த வகையிலாவது மீறினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது

தனது இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மட்டுமின்றி, சமீபத்தில் நடந்த எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதலுக்கும் இரானே காரணம் என்று அமெரிக்க தெரிவித்து வரும் பரபரப்பான சூழலில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

இரான் என்ன சொல்கிறது?

தற்போது, செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பு முன்னூறு கிலோ கிராமை தாண்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃப் கூறியுள்ளார்

”எனக்குச் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரான் தனது திட்டத்தின் படி 300 கிலோ வரம்பை மீறிவிட்டது” என தெஹ்ரானில் திங்கள் மாலை செய்தியாளர்களிடம் இரானின் வெளியுறவு துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவேத் ஜரீஃப் தெரிவித்ததாக இஸ்னா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

” இரானின் மொத்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு 300கிலோவை தாண்டியது என்பதை சர்வதேச அணுசக்தி நிறுவனம் உறுதி செய்ததாக நிர்வாகக்குழுவிடம் ஐ ஏ இ ஏ இயக்குநர் யூகியா அமனோ தெரிவித்தார்” என சர்வதேச அணுசக்தி நிறுவன செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.

மேலும், அமெரிக்காவின் பொருளாதார தடைகளின் விளைவுகளில் இருந்து இரானின் பொருளாதாரத்தை காக்கும் விதமாக வர்த்தகத்தை எளிதாக்கும் வகையிலான புதிய நுட்ப முறையை செயல்படுத்த, ஐரோப்பிய சக்திகள் நடைமுறையில் சாத்தியமான தெளிவான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தின்படி உள்ள எங்களது மற்ற சில கடமைகளையும் பத்து நாள்களுக்குள் மீறுவோம் என இரானின் வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

என்ன சொல்கிறது ஒப்பந்தம்?

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது

2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் மூலம், செறிவூட்டப்பட்டு யுரேனியத்தில் அதிகமாக இருப்பவற்றை சேமித்து கொள்ளாமல் இரான் வெளிநாடுகளுக்கு விற்க வேண்டும்.

அணு மின்சார உற்பத்தி செய்யும்போது கிடைக்கின்ற செறிவூட்டிய யுரேனியத்தை சேமித்து வைத்துகொண்டால் இரான் அணு ஆயுதங்களை செய்வதற்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இரான் வெளிநாடுகளுக்கு விற்பதன் மூலம், அணு மின்சாரம் தயாரிப்பதை இரான் தொடர்கின்ற வேளையில், அது அணு ஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள முடியும். -BBC_Tamil