சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளதாக சூடான் அரசுக்கு எதிர்தரப்பினர் சார்பான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிபர் ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிறகு சூடான் கொந்தளிப்பில் இருந்து வருகிறது.
சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அல்-பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
ஜனநாயக முறையில் புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலம் மூன்று ஆண்டுகள் என ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன.
கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று சூடானில் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு நாட்டின் அதிபராக ஒமர் அல் பஷீர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூடான் தலைநகரில் அச்சத்துடன் வாழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். -BBC_Tamil