மாலி கிராமங்களில் ஆயுதக்குழுவினர் ஆக்ரோஷ தாக்குதல்- 23 பேர் உயிரிழப்பு!

மாலியில் ஆயுதக்குழுவினர் கிராமங்களில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பதற்றம் நிறைந்த மத்திய மாலியில் உள்ள பிடி, சங்காரோ மற்றும் சரண் ஆகிய கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுதங்களுடன் புகுந்த ஒரு கும்பல், பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இதில், 23 பேர் கொல்லப்பட்டனர்.

நிலைமை மிகவும் சீரியசாக இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்கு ராணுவம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அருகில் உள்ள உயன்காரோ நகர மேயர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பர்கினா பாசோ எல்லையில் அமைந்துள்ள கோரோ நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

-athirvu.in