பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் விரோதத்தோடுதான் அமெரிக்கா உள்ளது – வட கொரியா

அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்தார்.

மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாவகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார்.

பதவியில் இருக்கும்போது வடகொரிய மண்ணில் காலடி வைத்த முதல் அதிபர் என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்தது.

ஆனால் தற்போது மீண்டும் வட கொரியா கோபமாக அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வடகொரியா என்ன கூறியுள்ளது?

கிம்

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி செய்வது குறித்து 2017ஆம் ஆண்டு எட்டப்பட்ட முடிவை வடகொரியா மீறியதாக, அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்ததற்கு இதன் மூலம் பதிலளிப்பதாக வட கொரிய தூதர் தெரிவித்தார்.

வடகொரியா மீது மேலும் தடைகள் விதிக்க கேட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ஐநா உறுப்பினர் நாடுகளுக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

அக்கடிதத்தில் உறுப்பினர் நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் வடகொரிய தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் தாய்நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

“அதிபர் டிரம்ப் உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்த அதேநாளில் இந்த நாடுகள் கூட்டாக எழுதிய கடிதமும் வெளியாகி இருக்கும் உண்மையை கவனிக்க வேண்டும்” என அந்த அறிக்கை கூறுகிறது.

“வட கொரியாவுடன் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளது. அதுவே நிதர்சனம்” என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமெரிக்க இன்னும் பதிலளிக்கவில்லை.

Presentational grey line
Presentational grey line

அமெரிக்கா – வட கொரியா உறவு எவ்வாறு உள்ளது?

சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டத்தை வட கொரியா கைவிட வலியுறுத்தி, அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த டிரம்பும் கிம்மும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.

கொரிய தீபகற்கத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதுகுறித்து தெளிவான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஹனோயில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் தெளிவாக ஏதேனும் ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அப்போதிலிருந்து எந்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. ஆனால் இருவரும் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அதிபர் டிரம்ப்பும், தலைவர் கிம்மும் சந்தித்துக் கொண்டனர்.

குட்டி ராக்கெட் மனிதர் என்று முன்பொரு காலத்தில் கிம்மை விமர்சித்திருந்த டிரம்ப், அந்த சந்திப்பின்போது, கிம் உடனான நட்பு சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil