வடமேற்கு சிரியாவிலுள்ள எதிரணியின் இறுதியிடம் மீதான ரஷ்யா தலைமையிலானதொரு தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததிலிருந்து குறைந்தது 544 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மனித உரிமைகள் குழுக்கள், மீட்புப் பணியாளர்கள் கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
எதிரணியின் கட்டுபாட்டிலுள்ள இட்லிப் மாகாணப் பகுதிகள் மற்றும் அதனுடன் இணைந்த வட ஹமா மாகாணங்கள் மீதான பாரியதொரு வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் திகதி சிரிய இராணுவத்துடன் ரஷ்ய ஜெட்கள் இணைந்திருந்தன.
இந்நிலையில், ரஷ்ய ஜெட்கள், சிரிய இராணுவத்தால் நடாத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் 130 சிறுவர்கள் உள்ளடங்கலாக 544 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெவ்வேறுபட்ட ஐக்கிய நாடுகள் முகவரகங்களுக்கு அறிக்கையளிக்கும் இழப்புகளை கண்காணிக்கும் மனித உரிமைகளுக்கான சிரிய வலையமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2,117 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், குறிப்பிட்ட எண்ணிக்கையான மருத்துவ நிலையங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ரஷ்ய இராணுவமும், அதன் சிரிய நட்புறவு இராணுவமும் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்குவைத்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய வலையமைப்பின் தலைவர் ஃபாடெல் அப்துல் கஹனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமது நாளாந்த வாழ்க்கையை பாதிப்பதாக எதிரணிப் பிரதேசங்களிலிருப்பவர்கள் தெரிவிக்கும் பொதுமக்கள் பகுதிகளில் கொத்தணிக் குண்டுகளால் தங்களது ஜெட்கள் இலக்கு வைப்பதை ரஷ்யாவும் அதன் நட்புறவு சிரிய இராணுவமும் மறுத்துள்ளன.
எவ்வாறெனினும், தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்கு முதல் சென்றவர்கள், சம்பவத்தைக் கண்ணுற்றவர்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சனநெருக்கடி மிக்க பொதுமக்களின் பகுதிகளில் ரஷ்ய, சிரிய இணைந்த இராணுவ நடவடிக்கையானது கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியிருந்தது.
-http://tamilmirror.lk