பொலிசாரை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியை காட்டிய சிறுமி சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் போலீசாரை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியை காட்டிய சிறுமி, சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹன்னா வில்லியம்ஸ் என்ற 17 வயதுச் சிறுமி, மன அழுத்தத்தைப் போக்குவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அவர், போக்குவரத்து விதிகள் அனைத்தையும் மீறியும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் தாருமாறாக ஓட்டிச் சென்றதை ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் ஒருவர் பார்த்துள்ளார்.

இதை அடுத்து சிறுமியின் காரை துரத்திச் சென்ற அவர் ஒரு கட்டத்தில் மடக்கினார். அப்போது காரை விட்டு இறங்கிய சிறுமி துப்பாக்கியைக் காட்டவே, தற்காப்பு நடவடிக்கையாக போலீஸ் அதிகாரி சிறுமியை சுட்டார்.

இதில் சிறுமியின் மார்பில் குண்டு பாய்ந்தது. பிறகு தான் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி போலி என்பது பின்னர் கண்டறியப்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி உயிரிழந்தார்.

இச்சம்பவமானது கலிஃபோர்னியா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் நேரடி வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், சிறுமி கொல்லப்பட்ட 90 நிமிடங்களுக்குப் பிறகு, அவரது தந்தை, தனது மகள் மாயமானதாக புகார் அளித்த ஆடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.

-athirvu.in