தைவானை எச்சரிக்கும் விதமாக சீனா போர் பயிற்சி!

அமெரிக்காவிடமிருந்து, தைவான் அரசு ஆயுதங்கள் வாங்கிய நிலையில், அந்நாட்டை ஒட்டியுள்ள பகுதியில், சீனாவின் கடற்படை மற்றும் விமானப்படையின் ஒருங்கிணைந்த போர் பயிற்சி நடைபெற்றுள்ளது.

தைவான் தனி நாடு அல்ல என்றும், அது தங்கள் நாட்டின் ஒருபகுதி என்றும், சீன அரசு, பல ஆண்டுகளாக கூறி வருகிறது.

இதற்கு தைவான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து, அண்மையில், 220 கோடி டாலர் மதிப்பில், ஆயுதங்களை கொள்முதல் செய்ய, தைவான் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சீனா, தேவையின்றி நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்தது.

இந்தச்சூழலில், தைவான் அருகே, சீன விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம், தென்கிழக்கு சீன கடல்பகுதியில், அண்மை நாட்களில், போர் பயிற்சி நடைபெற்றதாக தெரிவித்திருக்கிறது.

தென்கிழக்கு சீன கடற்பரப்பின் எந்த பகுதியில், சீன கடற்படை மற்றும் விமானப்படையின் ஒருங்கிணைந்த போர் பயிற்சி நடைபெற்றது என்பது குறித்த தகவலை, சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை.

-athirvu.in