ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.
”தங்கள் நிறம் குறித்த அச்சத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்பின் இந்த கருத்துக்கள் அதிகரித்துள்ளன என்று அதிபருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இந்த சபை அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக 240 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 187 வாக்குகளும் கிடைத்தன.
ஆனால், இந்த நான்கு பெண்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற அறைக்கூவல் விடுத்த டிரம்ப் மீண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். ”எனது உடலில் இனவெறிக்கு ஆதரவான ரத்தம் பாயவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
டிரம்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஜனநாயக கட்சியினரோடு நான்கு குடியரசு உறுப்பினர்களும், அந்த சபையின் ஒரே சுயேச்சை உறுப்பினரும் இணைந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் திங்கள்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட ட்வீட்டுகளை புறந்தள்ளிய இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது டிரம்பின் திசை திருப்பும் வேலை என்றும், மக்கள் இந்த சமூகவலைதள பதிவுகளில்,கவனம் செலுத்துவதைவிட அவர் கொள்கைகள் குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
ஞாயிறுக்கிழமையன்று வெளியிட்ட தொடர் ட்வீட்களில், காங்கிரஸ் சபையின் பெண் உறுப்பினர்களான அலெக்ஸ்சாண்ட்ரியா ஒகாஸியோ கோர்டெஸ், இல்ஹான் ஓமர், ஐயானா ப்ரெஸ்லி மற்றும் ரக்ஷிதா ட்லாய்ப் ஆகிய நால்வரின் பூர்விக நாட்டில் தற்போதுள்ள அரசுகள் முழுவதும் பேரழிவு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளன என்றும் ”இவர்கள் நால்வரும் தங்களை நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும்” என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் அவர் வெளிட்ட ட்வீட் பதிவுகளில் நேரடியாக மேற்கூறிய பெண் உறுப்பினர்களின் பெயரை குறிப்பிடவில்லை , ஆனால் அவர் குறிப்பிடுவது ஜனநாயக கட்சியை இந்த பெண் உறுப்பினர்கள் குறித்து தான் என்று விரைவில் புலப்பட்டது.
டிரம்புக்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே, அவரை பதவி நீக்க கோரும் தீர்மானம் கொண்டுவர ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல் கிரீன் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
ஆனால் இவருக்கு ஆதரவாக இதேகட்சியை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தந்த நிலையிலும் இந்த வேண்டுகோளை ஜனநாயக கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.
“அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் டிரம்ப், இதனால் பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil