கிறிஸ்டோபர் நைட்: 20 வயதில் இவர் துறவியாக காரணம் என்ன?

பலருக்குத் தனியாக இருப்பது பிடிக்காது. தனிமையாக உணர்வார்கள். இருந்தாலும், வேறு சிலருக்கு அது பேரானந்தமாக இருக்கும். பிபிசியின் ஷப்னம் கிரெவல், பதின்பருவத்தைத் தாண்டும் நிலையில் உலக வாழ்வில் இருந்து விடுபட்ட ஓர் அமெரிக்க துறவியிடம் பேசியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு 20 வயதான கிறிஸ்டோபர் நைட் என்பவர் மெய்னே மாகாணத்தில் ஊரகப் பகுதியில் ஒரு வனத்துக்குள் பயணம் சென்றார். தனது காரை அங்கேயே விட்டுவிட்டு, கூடாரம் அமைப்பதற்கான மிகவும் முக்கியமான சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மரங்கள் நிறைந்த காட்டுக்குள் சென்றுவிட்டார். 27 ஆண்டுகளாக அவர் வெளியே வரவில்லை.

தானாக விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகிச் சென்ற நைட், கடைசியாக ஒரு சிறிய இடத்தை தமக்காக தேர்வு செய்தார். அடர்ந்த காட்டுக்குள் வடக்குத் தடாகம் என்ற ஏரியை சுற்றிய பகுதியில் அந்த இடம் இருந்தது. மரங்களுக்கு இடையில் தார்ப்பாய் விரித்து, சிறிய நைலான் கூடாரம் அமைத்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். கோடைக்காலத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி முகாமிடும் இடத்தில் இருந்து, சில நிமிட நேர நடைபயணத்தில் அடைந்துவிடக் கூடிய தொலைவில் இருந்தாலும், அவர் முழுக்கவே வெளியில் தெரியாமல் இருந்து வந்தார்.

கிறிஸ்டோபர் நைட் கூடாரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த வாகனங்களில் இருந்தும், சமுதாய மையம் ஒன்றில் இருந்தும் தனக்குத் தேவையான பொருட்களை திருடி எடுத்துச் சென்று அவர் வாழ்ந்து வந்தார். தனக்குத் தேவையானவற்றை மட்டும் – உணவு, சமையல் எரிபொருள், துணிகள், பூட்ஸ்கள், டார்ச்களுக்குத் தேவையான பேட்டரிகள் மற்றும் நிறைய புத்தகங்களை அவர் எடுத்துச் சென்றார். முடிந்த வரை சிறிதளவு பாதிப்புகளை ஏற்படுத்தினார். ஆனால் பல ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட திருட்டுகள் செய்திருக்கிறார். இதனால் வாகன முகாம் உரிமையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. கடைசியாக அவரைக் கையும் களவுமாகக் காவல் துறையினர் பிடித்தனர்.

எழுத்தாளர் மைக் பின்கெல் இந்தப் புத்தகத்தை எழுதியபோது, அவரை சிறையில் சந்தித்தார். மரங்களுக்கு நடுவே அறிமுகமற்றவர் : கடைசி உண்மை துறவியின் அசாதாரணமான கதை என்ற தலைப்பில் அவர் புத்தகம் எழுதினார். எதற்காக, ஏன் இந்த உலகில் இருந்து விலகி, முழுக்க தனிமையில் வாழ்வதற்குச் சென்றீர்கள்'' என்று அவரிடம் பின்கெல் கேட்டார்.
<figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/37E5/production/_107890341_6a16d390-5cc1-4a77-91e7-d4d9fcc42c53.jpg" alt="வடக்குத் தடாகம்" width="624" height="415" data-highest-encountered-width="624" /><span class="off-screen">படத்தின் காப்புரிமை</span><span class="story-image-copyright">ALAMY</span></span></figure>
மக்களுடன் இருப்பது தனக்கு அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்ததாக கிறிஸ் நைட் கூறினார். இதற்கு ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். நீங்கள் ஏதும் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்களா, உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் ஏதும் இருக்கின்றனவா, ஏதும் குறிப்பிட்ட சம்பவம் காரணமா என்று அவரிடம் நான் கேட்டேன். அதுபோன்ற எதுவும் கிடையாது என்று அவர் பதில் அளித்தார். தனிமையில் இருப்பது புவியீர்ப்பு விசையைப் போல இருந்தது, தனியாக இருப்பது சவுகரியமான உணர்வைத் தருகிறது என்று உடல் சொன்னது என்று அவர் கூறினார்” என பின்கெல் தெரிவித்துள்ளார்.

இந்த ஈர்ப்பு காரணமாக அவர் சுமார் மூன்று தசாப்தங்களாக யாருடனும் பேசாமல், தனியாளாக காலத்தைக் கழித்திருக்கிறார். ஏறத்தாழ அப்படித்தான் இருந்தார். ஒரே ஒருவரிடம் அவர் பேசியிருக்கிறார். ஒரு நாள் மலையேற்ற நபர் ஒருவர் அவரைப் பார்த்த போது `ஹாய்’ சொல்லியிருக்கிறார்.

மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிரடிக்கும் குளிர்காலத்திலும் கூட அவர், தீ மூட்டியதில்லை. புகை காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் தீ மூட்டவில்லை.

“கிறிஸ்டோபர் நைட்டின் கதையில், மனதுக்கு அதிர்ச்சி தரும் நிறைய அம்சங்கள் உள்ளன” என்கிறார் பின்கெல்.

“மெய்னே மாகாணத்தில் மரங்கள் நிறைந்த காட்டில் ஒரு நாள் இரவு, நைலான் கூடாரத்தில் குளிர் பருவத்தில், தீ மூட்டாமல் தங்கினால் பிடித்துப் போகும். அதையே ஒரு வாரம் செய்தால் அற்புதமாகத் தோன்றும். ஒரு மாதம் செய்தால் உங்களால் நம்ப முடியாது. இந்த நபர் அதுபோன்ற 27 குளிர் பருவங்களில் இருந்திருக்கிறார்” என்கிறார் பின்கெல்.

இரவு சீக்கிரமே, இரவு 7 மணிக்கே தூங்கிவிட்டு, அலாரம் வைத்து அதிகாலை 3 மணிக்கு எழுந்து, உடலை சூடாக வைத்துக் கொள்வதற்கு நடைபயிற்சி செல்வேன் என்று பின்கெலிடம் நைட் கூறியிருக்கிறார்.

நேரத்தை செலவிடுவதற்கு என்ன செய்தீர்கள் என்று அவரிடம் பின்கெல் கேட்டார்.

“சில நேரம் புத்தகங்கள் படிப்பது, குறுக்கெழுத்து எழுதுவதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடவில்லை. `ஒன்றுமில்லை’ என்று நாம் சொல்வதைப் போலத்தான் அவரும் பெரும்பாலான நேரம் இருந்திருக்கிறார்.

அரை மணி நேரம் தனியாக அமர்ந்திருப்பதாகத் தோன்றினால், – ஒரு லிப்டில் சிக்கிக் கொண்டதைப் போலவும், உங்கள் செல்போனை டேபிளில் வைத்துவிட்டு வந்துவிட்டதைப் போலவும் நினைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பயமாக இருக்கும். மரங்களுக்கு நடுவே சிறிய இடத்தில் சிக்கிக் கொண்டதைப் போல கற்பனை செய்து கொள்ளுங்கள், பல நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் அப்படி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று நைட் கூறியுள்ளார்.

“ஏதுமற்ற நிலை பற்றி விவரிக்குமாறு நைட்டிடம் கேட்டபோது, ஆர்வத்தை தூண்டக் கூடிய சில விஷயங்களை அவர் கூறினார்” என்று பின்கெல் தெரிவித்தார்.

“முதலில், 27 ஆண்டுகளிலும், ஒரு நொடி கூட அவருக்கு போரடிக்கவில்லை. ஒருபோதும் தனிமையாக உணரவில்லை. இதற்கு நேரெதிராக உணர்ந்ததாக அவர் கூறினார். உலகில் மற்ற எல்லாவற்றுடனும் முழுமையாக, தாராளமாக தொடர்பு கொண்டிருப்பதைப் போல உணர்ந்ததாக நைட் கூறினார். தனது உடல் எங்கே முடிந்து, மரக் காடுகள் எங்கே தொடங்குகின்றன என்று சொல்வது கஷ்டமான விஷயமாக இருந்தது என்றார். இயற்கையுடனும், வெளி உலகத்துடனும் தனக்கான தொடர்பு இவ்வாறு தான் இருந்தது என்று அவர் கூறினார்” என பின்கெல் குறிப்பிட்டார்.

நைட் பொருட்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது புதிரான ஓர் அனுபவமாக இருக்கிறது. ஆனால் இது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளால் ஏற்படவில்லை. தனிமையால் ஏற்பட்ட அனுபவம்.

தனது திருட்டுக் குற்றங்களுக்காக கிறிஸ்டோபர் நைட் சிறையில் ஏழு மாதங்கள் இருந்தார். மைக் பின்கெல் தவிர வேறு எந்தப் பத்திரிகையாளருடனும் பேச அவர் விரும்பவில்லை. ஆனால் எனக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. எனவே, துறவிகள் என கூகுளில் தேடி, யாருடனாவது சாட் செய்து மகிழ்வேன்.

சாரா மெய்ட்லேண்ட் என்பவர் ஸ்காட்லாந்தில் தனிமையில் வசிக்கிறார். அவரே உருவாக்கிய எளிய அழகான வீட்டில் வசிக்கிறார். அவருடைய வீட்டு முன்வாசலில் நின்று பார்த்தால் பல மைல்கள் தூரம் வெட்டவெளியான நிலத்தைக் காணலாம். அவர் கிறிஸ்தவர். ஆனால் கிறிஸ்தவ முறைப்படியான துறவிகளைப் போல (இப்போதும் பழக்கத்தில் உள்ளது) உள்ளூர் பிஷப் யாரும் அவரை மேற்பார்வை செய்வது கிடையாது.

துறவியாக இருப்பதில் சுயநலம் இருக்கிறது என்று பலரும் நினைப்பதாக அந்தப் பெண்மணி கூறுகிறார்.

சாரா மெய்ட்லேண்ட்படத்தின் காப்புரிமைALAMY

“ஒரு படகில் நான் உலகைச் சுற்றிவரப் போகிறேன். அதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று நான் கூறினால், ஓ எவ்வளவு எழுச்சியான விஷயம்!' என்று சொல்கிறார்கள். என் வீட்டில் அமர்ந்து கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு யாருடனும் பேசாமல் இருக்கப் போகிறேன் என்று சொன்னால்,உனக்கு மூளை எதுவும் கோளாறா?’ அல்லது `நீ ஏன் அவ்வளவு சுயநலமாக இருக்கிறாய்?’ என்று கேட்கிறார்கள்.”

“தனிமையில் இருக்க விரும்புவது கெட்டது, சோகமானது, பைத்தியக்காரத்தனமானது என்று சொல்வது கேலியாக உள்ளது. அது சுயநலமாக இருப்பதால் நன்னெறிக்கு முரணானது என்கிறார்கள். அது துயரமானது என்பதால் சோகம் தரும். அபாயமானது என்பதால் பைத்தியக்காரத்தனமானது” என்கிறார்கள் என்று கேலியாக அவர் குறிப்பிடுகிறார்.

ஏன் தனிமையில் இருக்கிறார் என்ற கேள்விக்கு அவர் எப்படி பதில் அளிக்கப் போகிறார்? நீண்ட காலத்துக்கு தனிமையில், அமைதியாக இருப்பதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கிறது? அது “பேரின்பமாக” இருக்கிறது என்பது தான் அவருடைய பதிலாக இருக்கிறது.

“அமைதியில் தான் நான் பேரின்பத்தைக் காண்கிறேன். அமைதியில் மட்டுமே அது கிடைக்கிறது. எனக்குத் தெரிந்த பலரும் அமைதியில் தான் அதைப் பெறுகிறார்கள். அது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தனியாக நடந்து செல்கிறீர்கள், திடீரென `ஆம்!’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள். அது அசாதாரணமான தீவிரமான உணர்வு. முழுக்க மகிழ்ச்சிகரமானது” என்கிறார் அவர்.

இதுதான் மத சம்பிரதாயமான ஒரே செயல் என்று அவர் கருதவில்லை. இந்த பேரானந்தம் என்பது கடவுளுடன் தொடர்பு கொள்வது என்று அவர் குறிப்பிடுகிறார்.

“மாயமானதாக இருக்கும் பிரார்த்தனை என்ற பரிசு எனக்குக் கிடைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். ஏனென்றால் கடவுள் நம்முடன் இருப்பது கிளர்ச்சியூட்டும் அற்புதமான அனுபவமாக இருக்கிறது. அதுதான் சொர்க்கம் என்று நான் நினைக்கிறேன்! சொர்க்கத்தில் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மன நிறைவான உணர்வு -பாலுறவில் நாமாகவும், அதேசமயம் முழுமையாக வேறொருவருடனும் இருப்பதைப் போல, ஒருவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் உணர்வை, எனக்கு பிரார்த்தனை தருகிறது. இன்னொருவருடன் நெருக்கமான உரையாடல் செய்வதைப் போன்றது, மற்றொருவர் என்பது இறைவனாக இருக்கும் போது இந்த மகிழ்ச்சி சாத்தியமாகிறது” என்று அவர் கூறினார்.

இந்த உணர்வைப் பெறுவதற்கு முன் சிறிது காலம் நீங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மெயிட்லேண்ட் கூறுகிறார். நீங்கள் தனியாக இருக்கும்போது, சில நேரங்களில் வேறு விஷயங்களும் நடக்கும் என்கிறார்.

தனிமையில் தனக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்த அனுபவங்கள் குறித்து A Book of Silence என்ற தலைப்பில் அவர் புத்தகம் எழுதி வருகிறார். நீண்ட காலம் தனிமையில் இருப்பவர்களின் மிகவும் பொதுவான, வெவ்வேறான அனுபவங்கள் குறித்து அவர் பட்டியலிடுகிறார். தயக்கங்களைக் கைவிட்டு, உண்மையில் நீங்கள் யார் என்பதை உணர்வீர்கள். எப்போது நீங்கள் பணிவாக இல்லை அல்லது மற்றவர்களை மகிழ்விக்க முயல்கிறீர்கள் என்பது தெரிய வரும் என்பதெல்லாம் இதில் அடங்கும். உங்கள் மூக்கில் விரல் விட்டு சுத்தம் செய்வது, சப்தமாகப் பாடுவது அல்லது உடை அணிய மறந்து போவது என்பதாகவும் அது இருக்கும்.

அல்லது “உணர்வுகள் செறிவாதல்” என்றும் இருக்கும் என்கிறார். மெய்ட்லேண்டுக்கு சுவை உணர்வு மிகவும் தீவிரமாகிவிட்டது.

“உணவு மிகுந்த சுவையாகிவிட்டது. அதற்குப் புதுமையாக எதுவும் சேர்க்கப்படவில்லை. சும்மாவே அது அதிக சுவையாகத் தோன்றியது. கஞ்சியில் கஞ்சியின் சுவையை உணர முடிந்தது. ஆனால் குளியல் போன்ற உடல் சார்ந்த அம்சங்களில் எவ்வளவு தீவிரமாக பாதிப்பு ஏற்படுத்தியது என்பதும் இதில் இருக்கும். குளியல் மிகுந்த மகிழ்ச்சி தரும் – இளஞ்சூடான தண்ணீர் என்று மட்டுமல்ல. முழுமையாக ஆடம்பரமான அனுபவமாக அது இருக்கும். உங்களுக்கு சளி பிடித்தால், அதிக சளியாக இருக்கும் அல்லது அதிக ஈரமாக இருக்கும். உணர்வு அப்படி இருக்கும்” என்கிறார்.

அதன் பிறகு சிலவற்றை அவர் கேட்டிருக்கிறார்.

சாரா மெய்ட்லேண்ட்படத்தின் காப்புரிமைALAMY

துறவிகளுக்கு மாயமான குரல்கள் கேட்பது பொதுவான அனுபவமாக இருக்கிறது. தான் வாழும் சிறிய வீட்டில், ஒரு சிறிய அறையில் இருந்து லத்தீன் மொழியில் பாடப்படும், பெரிய குழுவின் பாடலை இந்தப் பெண்மணி கேட்டிருக்கிறார்.

இதுபோல பலவற்றையும், வேறு பல அனுபவங்களையும் தனிமையில் மெயிட்லேண்ட் பெற்றிருக்கிறார். ஆனால் அங்கிருப்பதை தேர்வு செய்ததால் மட்டுமே இந்த அனுபவங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. விருப்பத்துக்கு மாறாக இதுபோல தனிமையில் யாரையாவது அடைத்து வைத்திருந்தால், அருமையான குழு பாடலுக்குப் பதிலாக, மற்றவர்களுக்கு கெடுதல் செய்யும்படி குரூரமான குரல்களை, வலி ஏற்படுத்தும் அளவுக்கு சப்தமான குரல்களை அவர்கள் கேட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். உண்மையில் ஐ.நா. சிறப்பு நல்லுறவு ஏற்படுத்தும் ஆலோசகர் ஒருவர், தனிமைச் சிறை தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் தினசரி வாழ்க்கையில், தனியாக இருப்பது உண்மையில் கடினமானது. நேசித்த ஒருவர் இறந்துவிட்டால் அல்லது ஒரு காதல் முறிந்து போனால், முதன்முறையாக மக்கள் அமைதியை உணர்கிறார்கள் என்று மெயிட்லேண்ட் குறிப்பிடுகிறார். தனிமையாக இருப்பது ஆக்கபூர்வமானது என்பதை குழந்தைப் பருவத்தில் இருந்தே மக்கள் கற்றுக் கொள்வது நல்லது என்று அவர் நினைக்கிறார்.

“ஒரு தண்டனையாக நீங்களே உங்கள் அறைக்குச் செல்லும்படியான' நடைமுறையை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். அதை ஒருபரிசாக நீங்கள் கருதிக் கொள்ளலாம்.டார்லிங் இன்றைக்கு நாள் முழுதும் நீ நல்லவற்றை செய்திருக்கிறாய். மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறாய். நீ ஏன் அறைக்குச் சென்று, அரை மணி நேரம் தனியாக இருந்து அனுபவிக்கக் கூடாது” என்று சொல்லலாம்.

மெய்னேவை சேர்ந்த தனிமை விரும்பியான கிறிஸ்டோபர் நைட்டை பொருத்தவரை, தனிமையும், அமைதியும் பரிசுகள் தான். மரங்களுக்கு நடுவே சிறிய இடத்தில் வாழ்ந்து, மரங்களுக்கு நடுவிலேயே மரணித்திட, எதையும் விட்டுச் செல்லாமல் மரணித்திட அவர் விரும்பினார்.

முகநூல் மற்றும் சமூக வலைதள வசதிகள் உள்ள இந்தக் காலத்தில், எதுவுமே அறியப்படாமல் இருக்கட்டும் என்று இவர் விரும்பியிருக்கிறார்'' என்கிறார் மைக் பின்கெல்.அவரிடம் ஒருபோதும் காமிரா கிடையாது. பத்திரிகை எதுவும் கிடையாது. ஒன்றுமே இல்லை. அறியப்படாமல் முழுமையாக வாழ விரும்பினார், ஏறத்தாழ அதில் வெற்றி பெற்றார்” என்று பின்கெல் குறிப்பிட்டுள்ளார். -BBC_Tamil