மரண தண்டனை: நீதிபதிகள் விருப்பப்படி தீர்மானிக்கலாம்

மரண தண்டனையை ஒழிக்கப்பதற்காக 11வகை குற்றங்களுக்குக் கட்டாய மரண தண்டனை என்றுள்ள சட்டம் திருத்தப்பட்டாலும் நீதிபதிகள் விரும்பினால் ஒரு குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங்.

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம், வழக்கின் நிலவரங்களுக்கு ஏற்ப மரண தண்டனை கொடுப்பதா, ஆயுள் தண்டனை கொடுப்பதா, குறைவான தண்டனை கொடுப்பதா என்று தீர்மானிக்கும் விரிவான உரிமையை நீதிபதிகளுக்கு வழங்குவதாக லியு விளக்கினார்.

உத்தேச திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் கொடுக்கப்பட்ட தண்டனை குற்றத்தின் கடுமைக்கு ஏற்ப இல்லை என்று அரசுத் தரப்பு கருதுமானால் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் உரிமை அதற்கு இருக்கும் என்றாரவர்.

மரண தண்டனையை ஒழிப்பதற்கு பரிந்துரைக்கும் சட்ட வரைவு மக்களவையின் அக்டோபர் மாத அமர்வில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்.