பிரிட்டனின் பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று (புதன்கிழமை) அதிகாரப்பூர்மாக பதவியேற்றார்.

பதவியேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன் 99 நாட்களில்பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

அயர்லாந்து எல்லையில் எந்தவித சோதனைகளும் இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுடன் சுமூகமான வர்த்தகம் மற்றும் பரஸ்பர ஆதரவு உள்ளிட்ட அம்சங்களை கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

“நாட்டை நல்ல விதமாக மாற்ற வேண்டும்.” என உரையாற்றியுள்ளார்.

10 டெளனிங் தெருவிற்கு வெளியே பேசிய அவர், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறும். அதில் ’இருந்தால்’ என்றோ ’ஆனால்’ என்றோ எதுவும் இல்லை.

சந்தேகிப்பவர்கள், எதிர்மறையாக பேசுபவர்கள், அணுமானிப்பவர்கள் இது எதுவும் நடைபெறாது என்று கூறியவர்கள் அது அனைத்தும் தவறு என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையில் இடம்பிடிப்பவர்கள் குறித்தான அறிவிப்பை வெளியிடுவார்.

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனது பிரியாவிடை பேச்சில், “அரசின் வெற்றி நமது நாட்டின் வெற்றி” என தெரிவித்தார் தெரீசா மே.

பிரதமராக செயல்பட்டது குறித்து தான் பெருமையாக உணர்வதாக தெரிவித்த தெரீசா மே, போரிஸ் ஜான்சனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக, மூன்று வருடகாலம் பதவியில் இருந்து விலகிய தெரீசா மே, பிரதமரின் இல்லம் அமைந்த எண் பத்து, டெளனிங் வீதியில் இருந்து புறப்பட்டார். அங்கிருந்து பிரிட்டிஷ் அரசியை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து, புதிய பிரதமராக தேர்வாகியுள்ள போரிஸ் ஜான்சனிடம் அரசமைக்க வருமாறு அரசி முறைப்படி அழைப்பு விடுத்தார்.

போரிஸ் ஜான்சன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பின் போரிஸ் ஜான்சன் மற்றும் ராணி எலிசபத்துடனான சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.

போரிஸ் ஜான்சன் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்லும் வழியில், அவரின் காரை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர்.

PA MEDIAபடத்தின் காப்புரிமைபோரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த அமைச்சரவை உறுப்பினர்கள் சிலரும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

யார் இந்த போரிஸ் ஜான்சன்?

போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.

அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன.

தி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக போரிஸ் ஜான்சன் பணியாற்றியுள்ளார். குழப்பவாதியாக போரிஸ் ஜான்சன் அறியப்படுகிறார்.

இவர் பத்திரிகை துறையில் இருந்தபோது, உள்ளூர் அதிகாரிகளால் ஒருபாலுறவு ஆதரவு பிரசாரங்களை ஊக்குவிக்கும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளை கேள்வியெழுப்பினார். பின்னர், அரசியலில் நுழைந்தவுடன், பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களில் அரசு தலையிடகூடாது என்று தன் நிலைப்பாட்டை மாற்றினார்.

2001ல் ஹென்லி-ஆன்-தேம்ஸ் என்ற நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்பி ஆனார் போரிஸ் ஜான்சன். 2001லிருந்து 2008 வரை 7 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

2008ல் லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 2008 லிருந்து 2016 வரை 8 ஆண்டுகள் லண்டன் மேயராக பதவி வகித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் யூக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தென் ரூய்லிப்பின் எம்பியாக நான்குகாண்டுகள் இருந்தார்.

பிரதமராவதற்குமுன், இரண்டாண்டுகள் (2016 லிருந்து 2018 வரை) வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்தார். -BBC_Tamil