பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்திய அனுமதிக்கப்படாத போராட்டத்தில் மக்களை கலைப்பதற்கு ஹாங்காங் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, வடக்கு மாவட்டமான யுவான் லாங் வழியாக இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.
காவல்துறையினர் எதையும் கண்டு கொள்ளாமல் தாக்குதலாளிகளுடன் கைகோர்ப்பதாக இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் காவல்துறையோ இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
- ஹாங்காங் ரயில் நிலையத்திற்குள் ஆயுதமேந்தி புகுந்து தாக்கிய முகமூடி கும்பல்
- சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டதாக’ ஹாங்காங் தலைவர் அறிவிப்பு
ஏழு வாரங்களாக அரசுக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பல ஹாங்காங்கில் நடைபெற்றுள்ளன.
குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கக்கூடிய சட்டத்திருத்தத்தால் அங்கு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.
இந்த போராட்டங்களுக்கு பின்னர், இந்த சட்டத்திருத்தத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், காவல்துறையின் வன்முறை, உள்நாட்டு சீர்திருத்தம் மற்றும் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லெம் பதவி விலகல் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணி காவல்துறையால் தடைசெய்யப்பட்டிருந்தது.
- ஹாங்காங்: பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சை ஏன்?
- தலைவர்கள் இல்லாத ஹாங்காங் போராட்டத்தை செயலிகள் ஒருங்கிணைப்பது எப்படி?
காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டு யுவான் லாங்கில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளனர்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை டிசர்ட் அணிந்திருந்த சுமார் 100 பேர் கம்பு மற்றும் உலோக கம்பிகள் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை யுவான் லாங் ரயில் நிலையத்தில் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.
அவ்வாறு தாக்கப்பட்டதில் 45 பேர் காயமடைந்தனர். கும்பல் ஒன்றால் அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் விரைவாக செயல்படவில்லை. தாக்குதலாளிகள் சென்ற பின்னர்தான், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். -BBC_Tamil