சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், சந்தைகள் மற்றும் பேக்கரிகளில் கடந்த பத்து நாட்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 26 குழந்தைகள் உட்பட 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நாவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மீசெல் பச்சலெட் சிரிய அரசு மற்றும் அதன் கூட்டாளிகளே காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் “வெளிப்படையான சர்வதேச அலட்சியத்தால்” நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இட்லிப் பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பொது மக்களை இலக்கு வைக்கவில்லை என சிரியாவும் அதன் கூட்டாளியுமான ரஷ்யாவும் மறுத்துள்ளது.
“உலகின் வலிமைவாய்ந்த நாடுகளில் உள்ள தலைமையின் தோல்வி இது” என்று பத்திரிகையாளர்களிடம் பேசிய மீச்செல் தெரிவித்துள்ளார்.
இட்லிபில் அதிகரித்து வரும் பலிகள் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், சர்வதேச கட்டுப்பாட்டுக்கு வெளியே இந்த போர் சென்றுவிட்டதாகவும், இதனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் சர்வதேச தாக்குதல்கள் போர் குற்றங்களாகும். அந்த தாக்குதலுக்கு ஆணையிட்டவர்கள், அல்லது நடத்தியவர்கள்தான் அதற்கு பொறுப்பு” என பச்சலெட் தெரிவித்தார்.
என்ன நடக்கிறது சிரியாவில்?
சிரியாவில் எட்டு வருடமாக நடைபெற்று வரும் உள்நாட்டு போருக்கு பிறகு இட்லிப் மாகாணம், ஹமா மாகாணத்தின் வடக்கு பகுதி, அலெப்போ மாகாணத்தின் மேற்கு பகுதி ஆகியவை சிரிய அரசுக்கு எதிரான தரப்பினரின் வலுவான இடங்களாக இருந்து வருகிறது.
செப்டம்பர் மாதம், ரஷ்யா மற்றும் துருக்கி ஆதரவு பெற்ற அரசுக்கு எதிர் தரப்பு ஒப்புக் கொண்ட ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன்படி இந்த பகுதிகளில் உள்ள 2.7 மில்லியன் பொதுமக்கள் முக்கிய அரசு தாக்குதலில் இருந்து காக்கப்பட வேண்டும் என்பதாகும்.
ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சண்டை அதிகரித்ததிலிருந்து 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 3,30,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற நேர்ந்துள்ளதாகவும் கடந்த வாரம் ஐ.நா தெரிவித்திருந்தது.
- சிரியா நெருக்கடி: குடையும் கேள்விகளுக்கான பதில்கள்
- சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?
ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டும் 103 பேர் பலியாகியுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஆகும்.
எதிர்தரப்பில் அதிகமாக உள்ள அல் கெய்தாவுடன் தொடர்புடைய ஜிகாதிகள் ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறுவதுதான் தாக்குதல்கள் அதிகரிக்க காரணம் என்று ரஷ்ய அரசின் ஆதரவுப் பெற்ற சிரிய அரசு தெரிவித்துள்ளது.
சந்தை பகுதி ஒன்றில் வான் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதை ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால் அந்த தாக்குதலில் பொதுமக்கள் 31 பேர் பலியானார்கள்.
எப்படி தொடங்கியது சிரியா போர்?
சிரியாவில் போர் தொடங்குவதற்கு முன்னரே, அதிபர் பஷார் அல் அசாத் ஆட்சியில் அங்கு வேலையில்லா நிலையும், ஊழல் மற்றும் எந்தவித அரசியல் சுதந்திரமும் இல்லை என சிரிய மக்கள் தெரிவித்திருந்தனர்.
அண்டை நாடுகளில் எழுந்த அரபு வசந்தத்தால் தெற்கு நகரான டெராவில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்தன.
எதிர்பாளர்களையும், போராட்டக்காரர்களையும் ஒடுக்க அரசு முயன்றபோது, நாடு முழுவதும் அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
பதற்றநிலை அதிகரித்தன. அரசுக்கு எதிரானவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை எடுத்தனர். முதலில் அவர்களை காத்துக் கொள்ள அவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். அதன்பின் தங்கள் பகுதிகளில் உள்ள அரசுப் பாதுகாப்பு படைகளை அழிக்க ஆயுதங்களை ஏந்தினர்.
வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என்றும் கருதிய அதிபர் அசாத் இதை ஒடுக்கவதாக உறுதி எடுத்தார்.
அந்த வன்முறை நாளடைவில் அதிகரித்து உள்நாட்டு போராக மாறியது. -BBC_Tamil