நஜிப், ரோஸ்மா, மூசா ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை

பிரதமர் நஜிப், அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான் மற்றும் மலாக்கா மாநில முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட் யுசூப் உட்பட எழுவருக்கு சாட்சி அளிப்பதற்கு நீதிமன்றம் வருவதற்கான அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது என்று அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங் இன்று நீதிமன்றத்தில் கூறினார்.

அன்வார் அவரது 32 பக்க வாக்குமூலத்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாசித்து முடித்த பின்னர் கர்பால் இதனைக் கூறினார்.

கடந்த இரண்டு வாரத்தில் இந்த நால்வரும் பேட்டியளிப்பதற்கு எதிர்தரப்பால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வந்தனர், ஆனால் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

அழைப்பாணை பெற்றுள்ள புஸ்ராவி மருத்துவமனை மருத்துவர் முகம்மட் ஒஸ்மான் அப்துல் ஹமிட், நர்ஸ் யாஸிகான் ஜுஸோ மற்றும் “சுலியாதி” என்று மட்டுமே அறியப்பட்டுள்ள இந்தோனேசிய பணிப்பெண் ஆகியோர் இதர மூவர் ஆவர்.

அவர்கள் அழைப்பாணையை மறுக்க முடியுமா என்று வினாவிற்கு, மறுக்க முடியாது என்று கூறிய கர்பால், அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படலாம் என்றார்.

“அதைத் தள்ளி வைக்கலாம். இதுவரையில் அதற்கான மனு எதுவும் செய்யப்படவில்லை”, என்றாரவர்.

கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற அழைப்பாணை வெளியிடுவதற்கு மனு செய்யப்பட்டதாக இன்னொரு வழக்குரைஞர் சங்கரா நாயர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அரசு தரப்பு வழக்குரைஞர்கள் எதிர்க்கவில்லை. அழைப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன”, என்றாரவர்.

இன்று அந்த எழுவரும் நீதிமன்றத்தின் தீர்வுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.

“அரசு தரப்பு வழக்குரைஞர்கள் அந்த எழுவருக்கும் அழைப்பாணை சார்வு செய்யப்பட்டதையும் அவர்கள்  வந்திருக்க வேண்டியதியும் உறுதிப்படுத்தினர்.”

“அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தும் நஜிப், ரோஸ்மா, மூசா மற்றும் ரோட்வான் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரவில்லை”, அவர் மேலும் கூறினார்.

இது குறித்து கருத்துரைத்த அன்வார், “நஜிப்புக்கும் ரோஸ்மாவுக்கும் நாங்கள் அழைப்பாணை அளித்துள்ளோம். அவர்கள் வராமல் இருப்பதற்கு காரணம் ஏதும் இல்லை”, என்றார்.

“தலைவர்கள் என்ற முறையில் சட்டத்துடன் ஒத்துழைத்து அவர்கள் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்”, என்று அன்வார் மேலும் கூறினார்.