பிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை – தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள்

வடக்கு பிரேசிலில் உள்ள தொலைதூர அமேசான் காடு ஒன்றில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய தங்கச் சுரங்க பணியாளர்கள், பழங்குடியின தலைவர்களில் ஒருவரை கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பழங்குடியினர் தங்கம் நிறைந்த அந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற முயன்றால், வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் அமாபா மாநிலத்தில் உள்ள அந்த கிராம மக்கள் ஊரைவிட்டு சென்று வருகின்றனர்.

அந்த பகுதியில் கூடுதலாக போலீஸார் காவலில் பணியமர்த்தப்பட்டனர்.

பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி கொள்கைக் கொண்ட போல்சானாரோ அதிபராக பதியேற்றப் பிறகு காப்பு காடுகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதால் அமேசான் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

காப்பு காடுகளில் பல பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடத்தப்படும் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

“அந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் எண்ணிக்கைக்கு அந்த காட்டுப் பகுதிகள் மிகப் பெரியது.” என்று போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

வாஜாபி மக்கள்படத்தின் காப்புரிமைAFP

ஆனால் போல்சனாரோ சட்டவிரோத சுரங்க பணிகளை ஆதரிப்பதாகவும், காப்புக் காடுகளை ஆக்கிரமிக்க நினைப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஜாபி இன மக்கள் அதிகம் வாழும் யவிடோ என்னும் அந்த கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் 10-15 பேர் கொண்ட குழு ஒன்று நுழைந்து கிராம மக்களை விரட்டினர். எனவே அங்கு பதற்றநிலை அதிகரித்தது என பிரேசிலின் பழங்குடியினர்களுக்கான உரிமை முகமை தெரிவித்துள்ளது.

பழங்குடியின தலைவர்களை கொல்வது பிரேசிலில் ஒர் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமையன்று பேசிய போல்சனாரோ, “பழங்குடியின மக்கள் வாழும் சில பகுதிகளில் தூதுக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த பகுதியை கூட்டணிகள் அமைத்துக் கொண்டு ஆராய விரும்புகிறேன்.” என போர்சுகீஸ் செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்தார்.

“அமெரிக்காவுடன் நெருக்கமாக வேண்டும் என நான் முடிவெடுத்ததற்கு அதுதான் காரணம். அமெரிக்க தூதரகத்தில் ஒரு நம்பகமான நபரை நியமிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை அமாபா நிகழ்வு குறித்து போல்சானாரோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. -BBC_Tamil