பிரேசில் சிறையில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் உள்ள சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் உள்ள இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த இந்த சண்டை 5 மணி நேரத்துக்கு மேல் நடந்ததாக கூறப்படுகிறது.

பிரேசிலின் பாரா மாநிலத்தில் உள்ள அல்டாமிரா சிறைச்சாலையில் ஒரு குறிப்பிட்ட பிளாக்கை சேர்ந்த கைதிகள் மற்றொரு பிளாக்கை கைப்பற்றி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் சம்பவம் குறித்து விவரித்தனர்.

சிறை கலவரத்தில் இறந்தவர்களில் 16 பேரின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும், எஞ்சியவர்கள் சிறையில் குறிப்பிட்ட பிளாக்கில் தீ வைக்கப்பட்டதில் உண்டான புகை மற்றும் மூச்சுத்திணறலில் இறந்தனர் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் சிறை அதிகாரிகள் கூறினர்.

பிணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இரண்டு சிறை அதிகாரிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

52 பேர் உயிரிழப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய சிறை கலவரம் நண்பகலுக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டது என அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சிறையில் இருந்த சிசிஏ எனப்படும் குழுவை சேர்ந்தவர்கள், ரெட் காமெண்ட் என்ற குழுவை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்லுக்கு தீ வைத்தனர்.

தீ வைக்கப்பட்ட செல்லின் அமைப்பு விரைவாக தீ பரவும் விதமாக இருந்ததால் உடனடியாக பரவிய தீ அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே அல்டாமிரா சிறைச்சாலையின் அளவு 200 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடியது என்றும், ஆனால் தற்போது இந்த சிறையில் 309 கைதிகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

பிரேசில் சிறையில் போட்டி குழுக்களுக்குள் வெடித்த கலவரம் : 52 பேர் உயிரிழப்புபடத்தின் காப்புரிமைAFP

பிரேசிலில் சிறை கலவரங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. 2017 ஜனவரியில் நடந்த ஒரு சிறை கலவரத்தில் 130க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டனர்.

சிறைச்சாலைகளில் அதிக அளவு கைதிகள் அடைக்கப்படுவதும், அங்கு வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதும்தான் பிரேசிலில் சிறை கலவரங்கள் அடிக்கடி நடப்பதற்கு காரணமாக அமைகிறது என்று கூறப்படுகிறது. -BBC_Tamil